Aran Sei

ஜாமியா வன்முறையின் முதலாண்டு நினைவு : மாணவர்களின் பேரணியைத் தடுத்த காவலர்கள்

Image Credits: The Quint

டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் காவல்துறையினர் கடந்த ஆண்டு  தாக்குதல் நடத்தினர். இதன் முதலாம் ஆண்டு நினைவைக் குறிக்கும் வகையில், மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி செல்ல இருந்ததை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அறிஞரும் சமூக ஆர்வலருமான உமர் காலித்தின் தாயும் சகோதரிகளும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவிருந்தனர்.

உமர் காலித்தின் தாய் மற்றும் சகோதரிகள் உட்பட போராட்டக்காரர்களில் 14 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை காவலர்கள் மறுத்துள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, டிசம்பர் 15-ம் தேதி நடைபெற்ற வன்முறையைக் குறிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணியை நடத்துவதற்காகப் பட்லா இல்லத்துக்கு முன் ஒரு குழு கூடியிருந்ததாகத் தென்கிழக்கு டெல்லியின் துணை காவல் ஆணையர் ஆர்.பி.மீனா தெரிவித்துள்ளார்.

காவலர்கள் போராட்டக்காரர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, கொரோனா வழிகாட்டுதல்கள் தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் அவர்களிடம் வீடுகளுக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் மேலும்,  யாரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்று மீனா பிடிஐயிடம் கூறியுள்ளார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த நாளில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராகப் போராடியபோது, யாரோ  சிலர் கற்களை வீசி, வாகனங்களில் தீ வைத்தனர். இதையடுத்து காவலர்களும் துணை ராணுவப் படைகளும் ஜாமியா வளாகத்தைத் தாக்கிப் பல நூற்றுக்கணக்கான மாணவர்களைக் காயப்படுத்தி பல்கலைக்கழகச் சொத்துக்களை அழித்தனர்.

ஜாமியா நிர்வாகிகள் அளித்த புகாரை எஃப்.ஐஆராக கூட டெல்லி காவலர்கள் இன்னும் பதிவு செய்யவில்லை.

இருப்பினும், ஓக்லாவின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆசிப் கான் உட்பட 7 பேர் மீது டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம் மற்றும் ஜாமியா மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் மீதும் காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அக்டோபர் 1-ம் தேதி உமர் காலித் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, வடகிழக்கு டெல்லி கலவரத்தில் சதி திட்டம் திட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, செப்டம்பர் மாதம், அவர் கைது செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்