Aran Sei

டெல்லி கலவரம் – காவல்துறையினர் சாட்சிகளை அழிக்க முயன்றதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Image Credits: Outlook India

டெல்லி கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பலரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மெஹ்மூத் பிராச்சாவின் அலுவலகத்தில் காவல்துறையின் சிறப்புக் குழு சோதனை நடத்தியுள்ளது என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்தச் சிறப்புத் தேடல் குழு அவரது கணினி மற்றும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டியது. அதில் வழக்கு தொடர்பான விவரங்கள் இருந்தது. எனவே காவல்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது” என்று மெஹ்மூத் பிரச்சாவின் சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

“கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட காவல்துறையினர், வியாழக்கிழமை நிசாமுதீன் வெஸ்டில் உள்ள அலுவலகத்துக்கு மதியம் 12:40 மணியளவில் வந்தனர். காவல் அதிகாரி சஞ்சீவ் தலைமையிலான சிறப்புக் குழு, முதலில் மெஹ்மூத் பிரச்சாவிடம் மூன்று ஆவணங்கள் வேண்டும் என்று கூறியது. அதன்பின் கணினியையும் கொண்டு செல்வதாக அவர்கள் கூறினார்கள்” என்று மெஹ்மூத் பிராச்சாவுடன் பணியாற்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அவர்கள் கொண்டுவந்த ஆவணத்தின் படிவத்தில், கணினியைக் கைப்பற்றுவதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் மற்ற எந்த ஆவணத்தை வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தேடல் குழுவிடம் மெஹ்மூத் கூறியதாக அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மெஹ்மூத் பிராச்சாவுடன் பணியாற்றும் மற்றொரு வழக்கறிஞர், தகவல்களை வழங்க வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியது, வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் 1872-ம் ஆண்டு இந்திய சாட்சிய சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று கூறியுள்ளார். இது வழக்கறிஞருக்கும் வழக்காளிக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு மடிக்கணினிகளையும் ஒரு அச்சு இயந்திரத்தையும் கொண்டு வந்த காவர்துறையினர், மெஹ்மூத் பிரச்சாவின் கணினியை ஹேக் செய்ததாகக் கூறப்படுகிறது. மாலை 6:45 மணி வரை சோதனை நடைபெற்றுள்ளது.

சோதனை நடந்துகொண்டிருந்தபோது, அருகில் உள்ள காவலர்களை அலுவலகத்திற்கு அழைத்ததாக மெஹ்மூத் பிரச்சாவின் உதவியாளர் குன்வர் நவேத் தி வயர் – யிடம் தெரிவித்துள்ளார். சிறப்பு குழுவினர் தங்கள் அடையாள அட்டைகளை காண்பிக்கவில்லை என்றும் ஆவணங்களை அழிப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக மெஹ்மூத் பிராச்சா தெரிவித்துள்ளதாக தி வயர் கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்