Aran Sei

டெல்லியில் சாலை தடுப்புகளை அகற்றிய காவல்துறை – ‘நாங்கள்தான் சாலையைத் தடுத்தோம்’ என்கிற அவதூறு நீங்கியதாக விவசாயிகள் கருத்து

விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லி காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லையில் டெல்லி காவல்துறையால் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகளையும் தடுப்பு கம்பிகளையும் காவல்துறையினரே அகற்றி வருகின்றனர்.

இதுகுறித்து, விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையின் இந்த நடவடிக்கையானது டெல்லி எல்லைகளில் சாலைகளை ஒருபோதும் விவசாயிகள் தடுத்து வைக்கவில்லை என்ற உண்மை மேலும் உறுதியாகிறது என்று கூறியுள்ளது.

சம்யுக்த கிசான் மோர்ச்சா மூத்த தலைவர் தர்ஷன் பால் கூறுகையில், “போராடும் விவசாயிகள்தான் சாலைகளை மறித்ததாக பொய்யான குற்றச்சாட்டுகள் எங்கள் மேல் சுமத்தப்படுகின்றன. இதை முதல் நாளிலிருந்தே நாங்கள் நிராகரித்து வருகின்றோம். டெல்லி சிங்கு எல்லையில் மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக ஏற்கனவே மூடப்பட்ட சாலையின் ஒரு பகுதியைதான் விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

நவராத்திரி விழாவின் கடைசி நாள் – மோடி, அமித்ஷா, மோகன் பகவத் உள்ளிட்டோரின் உருவ பொம்மையை எரித்த விவசாயிகள்

மேலும், “தற்போது, ​​சாலை தடுப்புகளை அகற்றும் டெல்லி காவல்துறையின் நடவடிக்கையானது சாலைகளை மறித்தது காவல்துறைதான், விவசாயிகள் அல்ல என்ற எங்கள் கருத்தை மீண்டும் நிரூபிக்கிறது. நாங்கள் எந்த பிரச்சனையையும் உருவாக்கவில்லை” என்று தர்ஷன் பால் கூறியுள்ளார்.

சாலை தடுப்புகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட விவசாயிகள் சங்கங்களின் வழக்கறிஞர்கள், டெல்லி எல்லைகள் முடக்கப்பட்டதற்கு  டெல்லி காவல்துறைதான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தனர். விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லி காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லைகளில் மட்டும்தான் சாலை தடுப்புகள் அகற்றப்படுகின்றன. ஆனால், டெல்லி சிங்கு  எல்லையில் உள்ள சிமென்ட் தடுப்புகள் உட்பட சாலை தடுப்புகள் அகற்றப்படாமல், போக்குவரத்து மூடக்கப்பட்டது தொடர்கிறது.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்