Aran Sei

நீதிபதிகளுக்கு நட்சத்திர விடுதியில் கொரோனா சிகிச்சை – கண்டித்த நீதிமன்றம்; உத்தரவைத் திரும்பப் பெற்ற டெல்லி அரசு

ந்து நட்சத்திர விடுதியில் கொரோனா படுக்கைகள் அமைக்க டெல்லி அரசு உத்தரவிட்டு இருந்ததற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து உத்தரவை டெல்லி அரசு திரும்பப் பெற்றுள்ளது.

டெல்லி சாணக்கியாபுரி பகுதியில் உள்ள அசோகா ஐந்து நட்சத்திர விடுதியில், நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 100 கொரோனா படுக்கைகளைத் தயார் செய்ய டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு கடும் விமர்சனத்திற்கு உள்ளானதை அடுத்து, தானாக முன்வந்து வழக்கு பதித்து விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ”கொரோனா சிகிச்சை பெற ஐந்து நட்சத்திர ஹோட்டலை நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை என்றும் நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக பிரத்தியேகமாக அசோகா ஹோட்டலில் நூறு அறைகள்  ஒதுக்கப்பட்டதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

‘மக்களுக்கு படுக்கை வசதி இல்லை; நீதிபதிகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் படுக்கையா?’ – டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

வழக்கை விசாரித்த நீதிபதிகள் விபின் சந்தி மற்றும் ரேகா பல்லி அடங்கிய அமர்வு, “நாங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 100 படுக்கைகளை  எப்போது ஒதுக்கச் சொல்லிக் கேட்டோம்? நீதித்துறையை சேர்ந்த அதிகாரியோ அல்லது நீதிபதியோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மருத்துவமனையில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கூறியிருந்தோம். காரணம், நாங்கள் ஏற்கனவே இரண்டு நீதித்துறை அதிகாரிகளை இழந்துவிட்டோம்.” என தெரிவித்தனர்.

மேலும், ”உங்களிடம் ஆக்சிஜன் இல்லாத நிலையில், நீங்கள் ஐந்து நட்சத்திர விடுதியில் எங்களுக்குப் படுக்கைகள் ஏற்படுத்துவது குறித்து பேசுவது துரதிருஷ்டவசமானது” என நீதிபதி ரேகா பல்லி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், டெல்லி அரசின் இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற அறிவுருத்தப்பட்டிருப்பதாக டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடிய தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது நீதிமன்றம் ரத்து செய்யும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்