சாதி, மத மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான செயல்பாட்டு நடைமுறையை டெல்லி காவல்துறைக்கு அம்மாநில அரசு வழங்கியுள்ளது.
சாதி மறுப்பு செய்த தம்பதிகளுக்கு அவர்களது குடும்பம், உள்ளூர் சமூகம், சாதி பஞ்சாய்த்து அமைப்பு ஆகியோரால் ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற பாதுகாப்பு இல்லத்தில் தங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பான புகார்களை விசாரிக்கக் காவல்துறை துணை ஆணையர் தலைமையிலான சிறப்புப் பிரிவு அமைக்க வேண்டும் என்றும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சாதி, மத மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான புகார் செய்ய டெல்லி மகளிர் ஆணையத்தின் 181 என்ற கட்டணமில்லா ஹெல்ப்லைனை எண்ணைப் பயன்படுத்தலாம். மேலும், இந்தச் சேவையை 24 மணி நேரமும் பெற முடியும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
அந்தத் தம்பதிகளை முழுமையாக விசாரித்தபின்னர், சிறப்புப் பிரிவு தலைவராக இருக்கும் காவல்துறை துணை ஆணையர், இது தொடர்பான முழு தகவல்களை மாவட்ட நீதிபதியிடம் எடுத்துரைத்து, அந்தத் தம்பதிகளைப் பாதுகாப்பு இல்லத்தில் தங்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ஒருவேளை அந்தத் தம்பதிகளுக்குப் பாதுகாப்பு இல்லத்திற்கு பதிலாகத் தங்கள் இல்லங்களிலேயே தங்க விரும்பினால், அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என செயல்பாட்டு நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற வாரத்தில் டெல்லி ஹரிஜன் பஸ்தியில், மத மறுப்பு திருமணம் செய்ததற்காகப் பெண்ணின் வீட்டார் வன்முறையில் ஈடுபட்டத்து தொடர்பாகக் காவல்துறையினர் சிலரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.