Aran Sei

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு : வீட்டுக்காவலில் டெல்லி முதல்வர்

Image Credits: Indiablooms

சிங்கு எல்லையில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவரை டெல்லி காவலர்கள் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவின் டெல்லி காவல்துறை மாண்புமிகு முதல்வர் ஸ்ரீ அர்விந்த் கெஜ்ரிவாலை வீட்டுக் காவலில் வைத்துள்ளது. நேற்று  அவர் சிங்கு எல்லையில் விவசாயிகளை சந்தித்து வீடு திரும்பிய பின்னர், அவரது இல்லத்தை விட்டு வெளியேறவோ அல்லது நுழையவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராடிவரும் விவசாயிகளைச் சந்தித்தபின், ”நாம் விவசாயிகளின் ‘சேவையாளர்கள்’ போல் அவர்களைக் காப்போம்” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் வீடு திரும்பியபின் டெல்லி காவல்துறை அவரது வீட்டிற்கு செல்லும் அனைத்து வழியையும் அடைத்துள்ளது என்றும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் காவல் துறை அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது என்றும் அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சவுரப் பரத்வாஜ் ஏஎன்ஐ யிடம் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே எவ்வித மோதலும் நடைபெற கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்றும், இது போன்ற நடவடிக்கை வழக்கமாக எடுக்கப்படும் ஒன்றுதான் என்றும் முதல்வர் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்றும் வடக்கு டெல்லியின் காவல் ஆணையர் அன்டோ அல்போன்ஸ் கூறியுள்ளார்.

முன்னதாக வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இன்று (நவம்பர் 8) பொது வேலை நிறுத்தத்தை நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து டெல்லி-ஹரியானாவை இணைக்கும் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்