Aran Sei

டெல்லி சிவில் பாதுகாப்பு அதிகாரி கொலை வழக்கு – குற்றவாளிகளை தண்டிக்க எஸ்டிபிஐ கோரிக்கை

டெல்லி மாவட்ட நீதிபதி அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த 21 வயதான பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளைகளை சட்டத்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஸி கேட்டுக்கொண்டார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், டெல்லியில் நடைபெற்ற சம்பவம் நெஞ்சங்களை நடுநடுங்கச் செய்வதோடு கவலையையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.  அந்தக் கொடூரத் தாக்குதலில் அப்பெண்ணின் மார்பகங்கள் துண்டிக்கப்பட்டதாகவும், கழுத்து அறுக்கப்பட்டிருப்பதாகவும், பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருப்பதாகவும், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களால் நிரம்பி இருப்பதாகவும் அறியப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

பாலியல் வன்புனர்வு  செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், மாவட்ட நீதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஊழல்களையும், அங்குள்ள லாக்கரில் தினமும் 3 முதல் 4 இலட்சம் ரூபாய் வரை லஞ்சப் பணம் மறைத்து வைத்திருப்பது அப்பெண்ணின் கவனத்திற்கு தெரிந்த காரணத்தால் அதை மூடிமறைக்கவே இக்கொடூரப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் முன்வைக்கும் குற்றச்சாட்டைப் பொருட்படுத்தாமல் தான்தான் குற்றவாளி என்று சரணடைந்துள்ள போலிக் குற்றவாளி, அப்பெண்ணை அவன் மணமுடித்திருப்பதாகவும், வேறு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொலை செய்ததாகச் சொல்லும் கூற்றை மட்டும் நிலைநாட்டக் காவல்துறை முயற்சிகள் எடுப்பது கண்டனத்துக்குரியது என்று எம்.கே.பைஸி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“மத்தியில் பாசிச பாஜக அரசு அமைந்தது முதல் இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லியிலும்,  உ.பி. மாநிலத்திலும் பெண்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பு ஆபத்தான நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது வெட்கக்கேடாகும்.  பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை என்பவை ஒரு சாராரின் தனிப்பட்ட உரிமையாக ஆக மாற்றப்பட்டுள்ளதோடு, இத்தகைய கொடூரக் குற்றங்கள் புரிவோர் சட்டத்தால் தண்டிக்கப்படுவதற்கு மாறாக ஆளும் அரசுகளாலும், ஆதிக்க வர்க்கத்தாலும் ஆதரவளிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையாகும்.  அதிகார வர்க்கத்தின் இத்தகைய பொடும்போக்கு வன்புனர்வாளர்களையும், மோசமான சமூக விரோதிகளையும் இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட  மென்மேலும் ஊக்குவிப்பதாகவே அமையும்” என்றும் கூறியுள்ளார்.

காவல்துறையின் இத்தகைய திசைத்திருப்பும் போக்கை வன்மையாகக் கண்டித்த எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஸி, இக்கொடூரத்தில் ஈடுபட்ட ஈனத்தமான உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்கவும், இப்படுகொலைக்குப் பின்னால் உள்ள மர்மத்தை வெளிப்படுத்தவும் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவும் வலியுறுத்தினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்