Aran Sei

‘கொரோனா தடுப்பூசி தொற்றை தடுக்காது; ஆனால், உங்கள் உயிரை காக்கும் ’ – டெல்லி எய்ம்ஸ் இயக்குனர்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் வழியாக தொற்றால் ஏற்படும் கடும் காய்ச்சல் தடுக்கப்பட்டு, நீங்கள் உயிரிழக்காமல் காப்பாற்றப்படுவீ்ர்கள், ஆனால், கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பூசியால் தடுக்க முடியாது என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர்  ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 21), இணையவழியில் நடந்த கொரோனா தொற்று குறித்த கருத்தரங்கில் மருத்துவர்  ரன்தீப் குலேரியா கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, “கொரோனா தடுப்பூசி போடுவதன் பயன் என்ன என்று நிறைய பேர் கேட்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவருக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இத்தனைக்கும் அவர் தடுப்பூசி எடுத்துக்கொண்டு  இரண்டு வாரங்கள்தான் ஆனது. கொரோனா தொற்றால் ஏற்படும் கடுமையான காய்ச்சலையும், அதன் பொருட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதையும், நீங்கள் செலுத்திக்கொள்ளும் தடுப்பூசியானது தடுக்கிறது. உங்களை உயிரிழப்பில் இருந்தும் கூட அது காப்பாற்றுகிறது. ஆனால், தடுப்பூசியால் நீங்கள் தொற்றுக்கு உள்ளாவதை தடுக்கவியலாது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி எடுத்துக்கொண்டவருக்கு மீண்டும் கொரானா: எதிர்கட்சிகளின் விமர்சனத்தை மெய்ப்பிக்கிறதா கொரோனா மருந்து.

“தடுப்பூசி பெரும்பான்மையான மக்களுக்கு நல்ல வீரியத்தைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால், நீங்கள் ஒரு கொரோனா நோயாளியின் முன்னால் நின்றால், ​​கொரோனா வைரஸ் உங்கள் மூக்கு, தொண்டையில் தொற்றக்கூடும். அவ்வைரஸ் சில மணிநேரங்களில் பெருகக்கூடும். ஆனால், நீங்கள் எடுத்துக்கொண்ட தடுப்பூசியின் காரணமாக உற்பத்தியாகும் எதிர்ப்பு சக்தி, அவ்வைரஸை இன்னும் மேலும் பெருக அனுமதிக்காது. மேலும், நோய் கடுமையுறவும் அனுமதிக்காது. ஆகவே, நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.” என்று மருத்துவர்  ரன்தீப் குலேரியா விளக்கியுள்ளார்.

மேலும், “அந்த நேரத்தில், உங்களுக்கு கொரோனா தொற்று சோதனை மேற்கொண்டால், பாஸிட்டிவ் என்று வரும். மேலும், உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவவும் கூடும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்