Aran Sei

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி; எழுவர் விடுதலையில் ஆளுநரின் தாமதம் ஏற்புடையதன்று’ – கி.வீரமணி கண்டனம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக 30 ஆண்டுகளாக சிறையில் வாடுவோரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியதின் அடிப்படையில், மாநில அரசின் பரிந்துரைக்கு உட்பட்டவரான ஆளுநர் அவர்களை விடுதலை செய்யாமல் தாமதிப்பது – இழுத்தடிப்பது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், மேலும் காலதாமதம் செய்யாமல், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக (30 ஆண்டுகள்) சிறையில் உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில ஆளுநருக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டே உத்தரவிட்டது.

‘சிறிய எதிர்ப்பிற்கும் துப்பாக்கியை பயன்படுத்தும் ராணுவம்’ – நாகாலாந்து தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் குற்றச்சாட்டு

ஆனால், இதற்கு ஒன்றிய அரசும், சி.பி.அய்.யும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்நாடு அமைச்சரவை செய்த பரிந்துரையைக்கூட குடியரசுத் தலைவர் – (ஒன்றிய அரசு) கடந்த 2017 ஆம் ஆண்டு நிராகரித்தார்.

இதை எதிர்த்து பாதிப்புக்கு ஆளான பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ‘’ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கான பேட்டரியை நான் வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஓர்  ஆதாரத்தைக்கூட சி.பி.அய். இதுவரை கொடுக்கவில்லை. அதனால், என்னை வழக்கிலிருந்து விடுதலை செய்யவேண்டும்‘’ என்று அவ்வழக்கின்மூலம் கோரினார்.

விசாரணை அதிகாரி தியாகராசனும், நீதிபதி கே.டி.தாமசும் கூறியது என்ன?

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.அய்.க்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.

காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு நீக்கமும் மக்கள் உயிரிழப்பும் – ஒன்றிய அரசு தகவல்

(இவரது வழக்கினை தொடக்கத்தில் பதிவு செய்த தியாகராஜன் என்ற எஸ்.பி.,  அவர் கூறியதாக வலிந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்று அவர் மனச்சாட்சியோடு கூறினார். அதுமட்டுமல்ல, வழக்கில் தண்டனை வழங்கிய நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் இதுபற்றி தனது மனது ஒதுக்கீடுக் கருத்துகளையும் முன்பு பேட்டியாகக் கொடுத்துள்ளார்.)

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவு எடுக்க பல ஆண்டுகள் – காலதாமதம் செய்து, உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்பே, கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில் ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முழு அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. மாநில ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட முடியாது’ என்ற ஒரு புது நிலைப்பாட்டை எடுத்தார்.

பல மாதங்கள் கிடப்பில் இருந்த இந்த வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு மீண்டும் நேற்று (7.12.2021) வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர்கள் ராகேஷ் துவேதி, ஜோசப் அரிஸ்டாட்டில், ‘’ஆளுநர், அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவர். ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநர் அமைச்சரவை பரிந்துரையின்மீது உரிய முடிவு எடுக்க முடியாமல் காலம் தாழ்த்திவிட்டார்’’ என்று குற்றம் சாட்டினர்.

Love is Love: தன்பாலின திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கிய சிலி நாடாளுமன்றம்

மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, அதன் அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுடுத்திவிட்டது. இந்த நிலையில், ஆளுநர் தாமதிப்பது சரியல்ல.

பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன், ‘’பேரறிவாளன்மீதான குற்றச்சாட்டில் ஓர் ஆதாரத்தைக்கூட சி.பி.அய்.யால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை; அதனால், அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்யவேண்டும்.

மாநில ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்தும், அவர் அதனைக் கருத்தில் கொள்ளவில்லை. இந்த விவகாரம் இழுத்தடிக்கப்படுகிறது. அதுவரை பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கவேண்டும்‘’ என்றும் கோரியுள்ளார்.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் ‘’ஆளுநரின் – ஒன்றிய அரசின் முடிவு காலதாமதப்படுத்துவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்‘’ என்று உறுதிபடக் கூறியுள்ளது.

வாய்தா கேட்ட ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் தனது கடும் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளார் நீதிபதி.

பின், ‘’ஒரே ஒருமுறைதான் – இம்முறை மட்டும்தான் வாய்ப்புத் தரப்படும்‘’ என்று  கூறி, ஜனவரிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். மீண்டும் வாய்தா கேட்கக் கூடாது என்றே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்!

இதில் அரசமைப்புச் சட்டத்தினை ஆளுநர் மதிக்கும் கட்டாய பிரச்சினையும் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

‘நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு; கொலிஜியம் முறையை மாற்ற வேண்டும்’ – திருமாவளவன்

ஆளுநர் ஒன்றிய அரசின் கருத்துகளைப் பிரதிபலித்துதான் அவரது முடிவை இப்படி காலந்தாழ்த்துவதாகத்தான் பொருள், ‘’தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’’ என்ற நிலைமைக்கு அவர் தள்ளுவதாகவே ஆகும். உச்சநீதிமன்ற  அவமதிப்புக்கும் ஆளுநர் உள்ளாகி விட்டதுமாகும்.

எனவே, ஆளுநர் – ஒன்றிய அரசு மேலும் காலதாமதம் செய்வது, நியாயத்திற்கும், சட்டத்திற்கும் ஏற்புடையத்தக்கதாகாது.

அது, நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளதன் தத்துவத்திற்கு எதிரானதாகி விடும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்