Aran Sei

கேரள ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோல்வால்கரின் பெயர் – வலுக்கும் எதிர்ப்பு

Image Credits: Scroll

கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி சென்டர் எனும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய வளாகத்திற்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எம்.எஸ். கோல்வால்கரின் பெயரைச் சூட்ட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு அம்மாநிலத்தில் ஆளும் கட்சியிலிருந்தும் எதிர்க்கட்சியிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

இது தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இந்த வளாகத்துக்குக் கோல்வால்கர் பெயருக்குப் பதிலாக உலக அளவில் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகளின் பெயரைச் சூட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்திய சர்வதேச அறிவியல் விழாவைத் தொடங்கிவைத்து உரையாற்றிய ஹர்ஷ் வர்தன் “பயோடெக்னாலஜி சென்டரின் இரண்டாவது வளாகத்திற்கு ‘ஸ்ரீ குருஜி மாதவ் சதாஷிவ் கோல்வால்கர் தேசிய புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கான தேசிய மையம்’ என்று பெயர் மாற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி நடைமுறைப்படுத்த துடிக்கும் இந்துத்துவக் கொள்கைகளை வடிவமைத்தவர்களில் கோல்வால்கர் மிக முக்கியமானவர் என்று ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது. கோல்வால்கர் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டார் என்றாலும் அறிவியல் துறையில் அவர் எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை.

“ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி சென்டர் ஒரு மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனம், அதனை அரசியல் பிளவுக்குப் பயன்படுத்தக் கூடாது” என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

“பயோடெக்னாலஜி சென்டர் ஆரம்பத்தில் மாநில அரசால் நடத்தப்பட்டது. இது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் சர்வதேசத் தரத்தை அடையும் மையமாக வளர்க்கும் நோக்கத்துடன் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தால் இதனை மறுபரிசீலனை செய்யுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“பாஜக எல்லாவற்றையும் வகுப்பவாதமாக்க பிளவுபடுத்த முயற்சிக்கும் என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு இது” என்று பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

திருவனந்தபுரத்தின் மக்களவை உறுப்பினரும் அவையின் எதிர்க்கட்சி தலைவருமான சஷி தரூர் மத்திய அரசின் இந்த முடிவைத் தீர்க்கமாக எதிர்த்துள்ளார்.

“1966-ம் ஆண்டு விஸ்வ இந்து பரிஷத்துக்கு ஆற்றிய உரையில், விஞ்ஞானத்தை விட மதம் முக்கியமானது என்று கோல்வால்கர் பேசியுள்ளார். பெரிய ஹிட்லர்-அபிமானியான அவரை நினைவுகூர மத்திய அரசு விரும்புகிறதா?” என்று சஷி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்