உக்ரைனில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் மரணம், நீட் தேர்விற்கு எதிரான எதிர்ப்புணவை தூண்டியுள்ளது. கர்நாடகாவில் உள்ள அமைப்புகள் #BanNEET என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
“12 ஆம் வகுப்பில் 97% மதிப்பெண்கள் பெற்றும் நவீனுக்கு கர்நாடகாவில் மருத்துவ இடம் கிடைக்கவில்லை. எங்களால் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவ இடம் வாங்க முடியவில்லை. அதனால் நவீனை உக்ரைனுக்கு அனுப்புவதைத் தவிர எங்களுக்கு வழி கிடைக்கவில்லை” என்று நவீனின் தந்தை சேகரப்பா தி இந்துவிடம் கூறியுள்ளார்.
உக்ரைனில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவரின் இறப்பிற்கு நீட் தேர்வே காரணம்: எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு
“மருத்துவம் படிக்க விரும்பும் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கனவுகளுக்கு நீட் ‘சாவு மணி’ அடிக்கிறது. இந்தியாவில் மருத்துவ இடம் கிடைக்காத நவீன் போன்ற சிறந்த கிராமப்புற மாணவர் நீட் தேர்வின் ‘வெட்கமற்ற முகத்தை’ அம்பலப்படுத்தியுள்ளார். உக்ரைனில் மரணமடைந்துள்ள நவீனின் மரணம் இந்தியாவின் மனசாட்சியை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியுள்ளது” என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி ட்விட்டரில் கூறியுள்ளார்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், நீட் பயிற்சி மையங்கள் காளான்களாக வளர்ந்து மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பறித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 99 விழுக்காடு மாணவர்கள் இந்தப் பயிற்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம். பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி அளிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு என்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, அதை ஒழிக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. மருத்துவக் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பை மாநில அரசுகளே வழங்குவதால், ‘எங்கள் குழந்தைகளின்’ வாய்ப்புகளை ஒன்றிய அரசு ஏன் பறிக்கிறது என்று சமூக ஆர்வலர் ஸ்ருதி மருளப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் மொத்தமாக 84,649 மருத்துவ இளங்கலை இடங்கள் உள்ளன. அதில் கர்நாடகாவில் மட்டும் 9,445 இளங்கலை மருத்துவ இடங்கள் உள்ளன. இது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது மிக அதிகமாகும். கிட்டத்தட்ட இது இந்தியாவின் மருத்துவ இடங்களில் 11% ஆகும். ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு இவ்வளவு இடங்கள் இருந்தும் கூட, திறமையான மாணவர்களுக்குக் கர்நாடகாவில் மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்று ட்விட்டரில் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்விற்கு எதிராக இவ்வளவு விமர்சனங்கள் வந்த பிறகும் கூட, நீட் தேர்வு என்பது ‘மருத்துவக் கல்வியில் மிகவும் தேவையான சீர்திருத்தம்’ என்றும், அதை எதிர்ப்பவர்களை ‘துரோகிகள் மற்றும் பண முதலைகள்’ என்று கர்நாடக உயர்கல்வி அமைச்சர் அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.