Aran Sei

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவத்திற்கு ஆயுதம் வாங்கவில்லையா? – முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த நிர்மலா சீதாராமன்

Image Credits: Bloomberg Quint

ன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யவில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மார்ச் 21 ஆம் தேதி பதிலளித்த நிர்மலா சீதாராமன், இவ்வாறு பதில் அளித்திருந்தார்.

நிதியமைச்சராக பதவி வகிப்பதற்கு முன்பாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்ததை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், “இந்திய பாதுகாப்பு வரலாற்றில் முதல்முறையாக 10 ஆண்டுகளாக எந்த ஆயுதமும் வழங்கப்படவில்லை. 10 ஆண்டுகளை நாம் இழந்துவிட்டோம். 2014 ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் குண்டூசி முதல் விமானம் வரை அனைத்தையும் வாங்க வேண்டியுள்ளது.” என கூறினார்.

மேலும், பாதுகாப்புத்துறையை காங்கிரஸ் கட்சி நிராயுதபாணியாக்கியதாக கூறிய நிர்மாலா சீதாராமன், “பாதுகாப்புத் துறையில் எதுவுமே செய்யப்படவில்லை, எதுவுமே வாங்கப்படவில்லை. எதுவுமே ஒரிரவில் நடக்காது. 10 ஆண்டுகளாக எதுவும் வாங்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 10 ஆண்டு கொள்முதல் 7 ஆண்டுகளில் செய்யப்படுவது குறித்து பாராட்டப்பட வேண்டும்என பேசினார்.

தனக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களாக இருந்த பாஜக அமைச்சர்களின் தணிக்கை அறிக்கைகள் மற்றும் கூற்றுகளின் அடிப்படையிலேயே இந்த பதிலை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து அரண்செய் ஆராய்ந்த போது, தரவுகள் அதற்கு எதிராகவே உள்ளன.

உலக நாடுகளின் ராணுவ கொள்முதல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (எஸ்ஐபிஆர்ஐ) தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 3000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது தெரியவருகிறது.

விமானங்கள், ரேடார் கருவிகள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் பல ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் இதில் அடங்கும் என அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எஸ்ஐபிஆர்ஐ தரவுகளின்படி, காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில், 142 கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல் போன்ற மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடுகள் உட்பட17 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த 10 ஆண்டுகளில் 499 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளதும், அதிநவீன சீட்டா ரக விமானங்கள் மற்றும் மிக் ரக விமானங்கள் இதில் அடங்கும் என்று அந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் (30 ஹெலிகாப்டர்கள் மற்றும் 49 FGA விமானங்கள்), ரஷ்யா (148 ஹெலிகாப்டர்கள் மற்றும் 210 விமானங்கள்) மற்றும் அமெரிக்கா (6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 20 விமானங்கள்) ஆகிய நாடுகளிடம் இருந்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன.

இதே காலகட்டத்தில், 300 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 40 ஆயிரம் ஏவுகணைகள்  (நீர்வழித்தாக்குதல், பிரங்கி எதிர்ப்பு ஏவுகணை) வாங்குவதற்கு 29 ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டது. 90 விழுக்காடு ஏவுகணை வாங்க ரஷ்யாவிடமும், ஏவுகணைகளை வாங்க இஸ்ரேல், பிரான்ஸ், உக்ரைன் மற்றும் அமெரிக்காவிடம் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டனஎன எஸ்ஐபிஆர்ஐ தரவுகள் தெரிவிக்கின்றன.

1,400 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ரேடார் கருவிகள், ஏவுகணைகள், சோனார் கருவிகள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் மற்றும் டீசல் எஞ்சின்கள் வாங்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கொள்முதல் தவிர இந்திய ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, ஒன்றிய அரசின் ராணுவ அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நாட்டின் 6 ஸ்கார்பீன் வகை நீர்முழ்கிக் கப்பல்களை இந்தியாவில் தயாரிக்க, மும்பையின் மாஸகான் லிமிடெட் நிறுவனத்துடன் அக்டோபர் 2005ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படைக்காக ரூ. 2701 கோடி மதிப்பிலான 20 இலகு ரக விமானங்களை தயாரிக்கவும், 40 சுகோய், 30 ஜெட் விமானங்கள் வாங்கவும் ஒன்றிய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இந்திய விமானப் படைக்காக ரூ. 3835.38 கோடி மதிப்பிலான 6 சி 130 ரக விமானங்கள் வாங்குவதற்கு 2008 ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

2009 ஆண்டில், இந்திய கடற்படைக்காக 213.7 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பி-81 ரக, நீண்ட தூர ரோந்து விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதே ஆண்டில், ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கவும் இதே காலகட்டத்தில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட தரவுகள் மூலம் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து அடிப்படை ஆதாரங்கள் அற்றது என்பது தெளிவாகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்