தலித் மக்களைப் புறக்கணிக்கும் அதிமுக அரசிற்குத் தலித் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், அதிமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதென்றும், விசிக சார்பில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான நிதியைக் குறைத்து பல்லாயிரக்கணக்கான தலித் மாணவர்களின் உயர்கல்வியைப் பறித்துள்ளதாகவும், அமைச்சரவையிலும் நிர்வாகத்திலும் ஆதிதிராவிடர்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாமலும், ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்தாமலும் வேடிக்கை பார்ப்பதாகவும், சென்னை உயர்நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டும் மாநில எஸ்சி ஆணையத்தை இதுவரை அமைக்காமல் இழுத்தடிப்பதாகவும், பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளிலும் பஞ்சாயத்து செயலர் பதவிகளிலும் எஸ்சி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுப்பணிகளில் ஆதிதிராவிட மக்களுக்கான இடங்களைச் சரிவர நிரப்பாமல் வஞ்சிப்பதாகவும், ஆதிதிராவிட மக்களுக்குப் பட்டா வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டுவதாகவும் பஞ்சமி நிலம் இரண்டரை இலட்சம் ஏக்கர் கண்டறியப்பட்ட பிறகும்கூட அதை உரியவர்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்துவது – போன்ற அதிமுக அரசு தொடர்ந்து தலித் மக்களுக்கு அநீதி இழைத்து வருவதாகவும் மக்களவை உறுப்பினர் திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.