Aran Sei

தலித் கொலை வழக்கு : விசாரிக்காத காவல் துறையினர் – உயர்நீதிமன்றம் நடவடிக்கை

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் 31 வயதுடைய தலித், கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சமரசம் செய்யும்படியும் வழக்கைத் தொடரக்கூடாது என்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தியதால், இவ்வழக்கை காவல்துறை குற்றப்பிரிவின் சிறப்புக் குழு மீண்டும் விசாரிக்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது

நாக்லா மச்சைலா கிராமத்தில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி எட்டு பேர் கொண்ட குழு, பட்டியலினத்தைச் சேர்ந்த மகேஷை கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவரது உடல் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுப் பிரேத பரிசோதனைக்காகப் பேயானாவில் உள்ள சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தக் கொலை வழக்குத்  தொடர்பாக  ருடாவால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால்,  இதுவரை  கொலைத் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாமலேயே விசாரணை அதிகாரி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ததாகக் கூறப்டுகிறது.  காவல் துறையினர் வழக்கின் விசாரணையை நிறுத்திவிட்டதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தில் கொலையான மகேஷின் சகோதரர் சுனில் குமார் அளித்த ரிட் மனுவில், பஞ்சாயத்து தலைவர்  ஒரு கூட்டத்தை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சமரசம் செய்யும்படியும் வழக்குத் தொடரப்படகூடாது  என்றும் தம் குடுபத்தினரைக்  கட்டாயப்படுத்துவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. முதல் தகவல்  அறிக்கையில் பெயரிடப்பட்ட போதிலும் குற்றம் சாட்டப்பட்ட எவரும் கைது செய்யப்படவில்லை என்பதை கவனித்த நீதிபதி, நேரில் கண்ட சாட்சிகள் இருந்தும் “விசாரணை அதிகாரி நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றுள்ளார்”  என்று குற்றம் சாட்டியுள்ளார் என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.

குற்றப்பிரிவின் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்புக் குழு, இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

“நியமிக்கப்படும் புதிய விசாரணை அதிகாரி முழு ஆதாரங்களையும் சேகரித்து, வழக்கின் தொடக்கத்திலிருந்து   சுயாதீனமாக விசாரணையை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், ”என்றும் உத்தரவிட்டுள்ளது. .

இந்த வழக்கை விசாரித்த காவல்துறை உதவி ஆய்வாளர் தனது கடமையைச் செய்ய தவறியததற்க்காகத் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை கண்காளிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்களைக் கட்டாயப்படுத்திய பஞ்சாயத்தார் குறித்து தெரிவிக்க விசாரணை அதிகாரி தவறவிட்டார் என்றும்  ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்