Aran Sei

காவல் நிலையங்களில் மனித உரிமை அச்சுறுத்தல்கள் அதிகமாக உள்ளன – உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா

காவல் நிலைய சித்ரவதை மற்றும் காவலர்கள் அட்டூழியங்கள் நிலவுவதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ”காவல் நிலையங்களில் மனித உரிமைகள் அச்சுறுத்தல் மிக அதிக அளவில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல்ஏ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி ரமணா, “மனித உரிமைகள் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் காவல் நிலையங்களில் அதிகமாக உள்ளது. காவல்நிலைய சித்ரவதை, காவலர்கள் அட்டூழியம் போன்ற பிரச்னைகள் இன்னும் நம் சமூகத்தில் நிலவி வருகிறது. அரசியலமைப்பு உத்திரவாதங்கள் மற்றும் பிரகடனங்கள் இருக்கும் போதிலும், காவல்நிலையங்களில் உரிய சட்ட பிரதிநிதித்துவம் இல்லாதததால், கைது செய்யப்பட்ட மற்றும் காவலில் உள்ளவர்களுக்குப் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன” என குறிப்பிட்டார்.

”தொடக்க நிலையில் எடுக்கப்படும் முடிவுகளே பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை தற்காத்துக் கொள்ளும் முடிவைத் தீர்மானிக்கும். சமீபத்திய அறிக்கைகளின்படி, சலுகை பெற்றவர்கள் கூட மூன்றாம் தர சித்ரவதையில் இருந்து தப்பவில்லை” என அவர் கூறினார்.

”காவலர்கள் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதற்கு, சட்ட உதவிகளுக்கான அரசியலமைப்பு உரிமை மற்றும் இலவச சட்ட உதவி தேவைகள் கிடைப்பது தொடர்பான தகவல்களை பரப்புவது அவசியமாகிறது. இதை முதல் படியாக காவல் நிலையம் மற்றும் சிறைச்சாலைகளில் காட்சிப்பலகை மற்றும் வெளிப்புற விளம்பர பலகைகள் நிறுவப்பட வேண்டும்” என ரமணா குறிப்பிட்டார்.

சமூக-பொருளாதார அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற தேவையை வலியுறுத்திய தலைமை நீதிபதி ரமணா, சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு சமூகமாக நாம் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Source : The Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்