Aran Sei

தாய், மகனை தாக்கிய ‘கலாச்சாரக் காவலர்’ – காவல்துறை வழக்குப் பதிவு

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை உணவகத்தில் காரில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகனை, ‘ஒழுக்கக்கேடான’ நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி தாக்கப்பட்டது தொடர்பாக ஆஷிஷ் என்ற இளைஞரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஷாம்லா (44) மற்றும் அவரது மகன் சாலு (21) மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

”உணவகங்களில் உணவருந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் காரில் அமர்ந்தே உண்ண முடிவு செய்து, பாரவூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் காரை நிறுத்தினோம். அப்போது எங்கள் வாகனம் அருகே வந்த இளைஞர், இங்கு நீங்க ஒழுக்ககேடான செயல்களில் ஈடுபட முடியாது என கூறினார். ஒழுக்கக்கேடான விசயங்களில் எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை. நாங்கள் உணவருந்த காரை இங்கே நிறுத்தி இருக்கிறோம் என்று எனது மகன் தெரிவித்தார். அதை ஏற்க மறுத்த அந்த இளைஞர் நீங்கள் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவர் தாய் என்பதை நான் உணரவில்லை என்று கூறினார்” என ஷாம்லா கூறியுள்ளார்.

”முதலில் காரைச் சேதப்படுத்திய அவர், பின்னர் எங்களை காரில் இருந்து வெளியே இழுத்து இரும்பு கம்பியால் தாக்கினார். இந்தச் சம்பவம் பட்டப்பகலில் மதியம் 3 மணிக்கு நிகழ்ந்தது. பலர் அந்த வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர், ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை. பின்னர் தான் இது போன்ற தாக்குதல் அந்தக் கடற்கரை சாலையில் பொதுவானது என்பதை நாங்கள் அறிந்தோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவர்கள் புகார் அளிக்கக் காவல்நிலையம் சென்றபோது, முதலில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றப் பிறகு, புகார் அளிக்க வருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் புகார் அளிக்க செல்லும் முன்பு, ஆடு காரின் மீது மோதியதால் தாக்குதல் நடத்தியதாக தாக்குதல்காரர் அளித்த புகாரின் பெயரில் ஷாம்லா மற்றும் அவரது மகன்மீது வழக்குப் பதியப்பட்டது.

கொல்லம் உதவிக் காவல் ஆணையர் ஜி. கோபகுமார், “காவல்துறை தரப்பில் எந்த தவறும் இல்லை. தாய், மகன் இருவரும் பலத்த காயங்களுடன் காவல்நிலையம் வந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தான் முன்னுரிமை. எனவே, தான் அவர்களை முதலில் மருத்துவ சிகிச்சை பெற பரிந்துரை செய்தோம்” என கூறியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்