Aran Sei

சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான ரூ.13,450 கோடியில் பிரதமர் என்னென்ன செய்திருக்கலாம் – பட்டியலிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு ஒதுக்கிய ரூ.13,450 கோடியை வைத்து பிரதமர் மோடியால், 45 கோடி பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தியிருக்க முடியும் என்றும் ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி இருக்க முடியும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரையிலான, 3 கிலோ மீட்டர் தொலைவில், புதிய நாடாளுமன்றம் மற்றும் அரசு கட்டிடங்கள் கட்டும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் – திட்ட செலவு 13,450 கோடியாக உயர்வு

மத்திய பொதுப்பணித்துறை முன்வைத்த இந்த வரைவுத் திட்டத்தில், மத்திய செயலக கட்டிடங்கள், மத்திய கருத்தரங்க மையம், பிரதமருக்கான இல்லம், சிறப்புப் பாதுகாப்புப் படை இல்லம், குடியரசு துணைத் தலைவருக்கான சிறப்பு வளாகம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மொத்த கட்டிட பரப்பளவு 17.21 லட்சம் சதுர மீட்டர். இதற்காக, 4.58 லட்சம் சதுரமீட்டர் அளவிலான இப்போதைய கட்டுமானங்கள் இடிக்கப்படும்.

மத்திய அரசு இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.13,450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஒரு கிரிமினல் விரயம் – ஒன்றிய அரசை விமர்சித்த ராகுல் காந்தி

இந்நிலையில், இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பிரிவு தனது முகநூல் பக்கத்தில், “பிரதமர் மோடி 13450 கோடியை வைத்து என்ன செய்கிறார் தெரியுமா? மக்கள் மேல் அக்கறையற்று புத்தம் புதிய மஹாலை தனக்காகக் கட்டிக் கொண்டிருக்கிறார் மோடி. 13450 கோடியில் என்ன செய்ய முடியும்? 45 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டிருக்க முடியும். ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி இருக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், 40 மெகா கோவிட் மருத்துவமனைகள் கட்டியிருக்க முடியும் என்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 6000 கோடி நிவாரணம் வழங்கி இருக்க முடியும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பட்டியலிட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணியைத் தொடங்க கூடாது – உச்ச நீதிமன்றம்

அண்மையில், இதுகுறித்து டிவீட் செய்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆக்சிஜன் இல்லாது மக்கள் செத்துக்கொண்டிருக்க, தனது அதிகார வெறியை தம்பட்டம் அடித்துக்கொள்ள, மக்களின் பணத்தை பறித்து பிரதமர் இரையாக்கிக் கொள்வார் என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்