Aran Sei

‘திரிபுராவில் திரிணாமூல் பெண் தலைவர் கைது; கட்சியினர்மீது தாக்குதல்’- பாஜகவின் பாசிச பயங்கரவாதமென சிபிஐ(எம்) கண்டனம்

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சயோனி கோஷ் கைது செய்யப்பட்டதற்கும், காவல் நிலையத்திற்கு வெளியே அக்கட்சியின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டடதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி நெருங்கி வருவதால், பாஜகவின் பாசிச பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. இடதுசாரி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள்மீது தொடர்ச்சியாக பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. புகார் அளித்தும், குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறை ஊமை பார்வையாளர்களாக நடிக்கின்றனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

34 ஆண்டு கால மேற்கு வங்க இடதுசாரி ஆட்சியை, 2011ல் ஆட்சியை பிடித்த மம்தா பானர்ஜி முடிவுக்கு கொண்டுவந்தார். அம்மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம்(நவம்பர் 20), இரவு, பாஜகவைச் சேர்ந்த திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் கலந்துக்கொண்ட கூட்டத்திற்கு இடையூறு செய்ததாக கூறப்பட்டதோடு, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ், சயோனி கோஷை திரிபுரா காவல்துறை கைது செய்தது.

கிழக்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்திற்கு வெளியே பாஜக தொண்டர்களால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக அக்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்