நடிகர் சூர்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுடைய கருத்து உரிமைக்கும் எதிராக செயல்படும் பாஜக தலைமையின் போக்கை மாற்றிட வக்கற்றவர்கள், தனி நபர்களுக்கு எதிராக பாய்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (ஜூலை 4), சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில இளைஞர் அணிசெயற்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
‘மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை’ – நடிகர் சூர்யா
அப்போது, நடிகர் சூர்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள்து. அதில், “நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா தொடர்ந்து உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். பிரதமர் மோடி அரசின் மக்கள் நலத் திட்டங்கள், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்துக்காக எதிர்த்து வருகிறார். படைப்பாளிகளின் உரிமையை பாதுகாக்கும் ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூர்யாவின் செயல் கண்டனத்துக்குரியது. தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வந்தால் அவர்மீது பாஜக இளைஞர் அணி வழியாக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இன்று (ஜூலை 5), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கே.பாலகிருஷ்ணன், “திரைக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால் அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
திரைக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார்.
ஆனால் அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) July 5, 2021
“தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுடைய கருத்து உரிமைக்கும் எதிராக செயல்படும் பாஜக தலைமையின் போக்கை மாற்றிட வக்கற்றவர்கள், தனி நபர்களுக்கு எதிராக பாய்ந்துகொண்டிருக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரிய செயல்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், விமர்சனக் குரல்கள் ஒன்றிரண்டு தானே என அடக்க முயற்சித்தால், ஆயிரம் ஆயிரமாக மக்கள் ஆர்ப்பரித்து எழுவார்கள், அடக்குமுறைக் கும்பல்கள் அந்த வீச்சில் காணாமல் போய்விடுவீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.