தேசிய அலுமினிய நிறுவனத்தை (நால்கோ) தனியார்மயமாக்கும் முடிவைத் திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா கடிதம் எழுதியுள்ளார்.
அரசின் இந்த முடிவிற்கு எதிராக ஊழியர்கள் மத்தியில் பரவலான அதிருப்தி நிலவுவதாக அவர் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
”நால்கோவை தனியார் மயமாக்க முடிவு செய்திருக்கும் உங்கள் அரசின் திட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நால்கோவை தனியார் மயமாக்குவதன் மூலம் 100 விழுக்காடு முதலீட்டை விலக்கிக் கொள்ளும் உங்கள் அரசாங்கத்தின் பேரழிவு திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
”கனிம வள அமைச்சகத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான நால்கோ ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையாக விலகி வருகிறது. மேலும், 40 ஆண்டுகளாக உயர்தர அலுமினியத்தை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி பணியில் ஈடுபட்டு வருகிறது.” என ராஜா கூறியுள்ளார்.
”இந்த தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைக்கு மக்கள் மற்றும் தொழிலாளர் மத்தியில் ஒரு பரவலான அதிருப்தி உள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.” என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நால்கோ தொடக்கத்தில் இருந்தே லாபம் ஈட்டி வருகிறது மற்றும் உற்பத்தி, உற்பத்திதிறன், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் நிலையான சாதனையைத் தொடர்ந்து வருகிறது என ராஜா தெரிவித்துள்ளார்.
ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அந்நிய செலாவணியை ஈர்க்கும் நிறுவனமாக நால்கோ விளங்கி வருகிறது. மேலும், தேசிய மற்றும் மாநில கருவூலங்களுக்கும் பங்குதாரர்களுக்கும் கணிசமான தொகையை ஈவுத்தொகையாக வழங்கி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாடு, தொழிலாளர்கள் மற்றும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் சாதகமான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று ராஜா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.