அடுத்த சில நாட்களில் நாட்டு மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி திட்டத்தின் ஒவ்வொரு விவரமும், தேசிய மட்டத்திலிருந்து அடிமட்ட நிலை வரை மக்களுக்குத் தெரிவிக்கப்படுவதை அரசு உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் ஒத்திகையை மேற்பார்வையிட்ட அமைச்சர், “முதலில் சுகாதார வல்லுநர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
“குறுகிய காலத்தில், தடுப்பூசிகளை உருவாக்கியதன் மூலம் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது… அடுத்த சில நாட்களில், நம்மால் இந்தத் தடுப்பூசிகளை நம் நாட்டு மக்களுக்குக் கொடுக்க முடியும். இது நம் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும், அதைத் தொடர்ந்து முன்னணி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்” என்று ஹர்ஷ் வர்தன் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘முதல் கொரோனா தடுப்பூசியை பிரதமர் எடுத்துக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ் அறிவுரை
முன்னதாக, “இந்த தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே சந்தேகம் உருவாகியுள்ளது. ஆகவே, இந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்காக, ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப் போல், பிரதமர் நரேந்திர மோடியும் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்” என்று பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அஜித் சர்மா தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.