Aran Sei

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது – மத்திய அரசுக்கு முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது என மத்திய அரசை, நாட்டின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் எச்சரித்துள்ளார்.

உருமாற்றம் பெற்று வரும் கொரோனா மற்றும் அதன் வகைகளைச் சமாளிக்க கொரோனா தடுப்பூசிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 5) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”மூன்றாவது அலை எப்போது நிகழும் என்பதற்கான தெளிவான காலக்கெடு இல்லை. கொரொனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகளை மேம்படுத்தலைக் கொண்டு புதிய அலைக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள முடியும்.” என அவர் தெரிவித்தார்.

‘தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன் வழங்குவதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா கடிதம்

மேலும், வைரஸின் தன்மை உருமாற்றம் அடைந்தாலும், அதன் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாற்றமில்லையெனத் தெரிவித்துள்ள விஜய்ராகவன், ”அனைவரும் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றித் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். வைரஸின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து அதற்கேற்ப அதைச் சமாளிக்கும் பணிகளில் ஈடுபட அறிவியல் சமூகம் தயார்நிலையில் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது என்ற கூற்றை மறுத்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் இதுவரை மனிதர்களிடம் மனிதர்களுக்குப் பரவுது மட்டுமே கண்டறியப்படுள்ளது எனக் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேசிய நோய் கட்டுப்பாடு மையத்தின் (என்.சி.டி.சி) இயக்குனர், மருத்துவர் சுஜீத் குமார் சிங், வைரஸ் உருமாற்றம், பரவல், தடுப்பூசி மேம்படுத்துதல் குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

“சுகாதார அமைச்சகம் மற்றும் என்.சி.டி.சி ஆகியவற்றின் எழுத்துப்பூர்வ தகவல்தொடர்புகள் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் முறையான இடைவெளியில் அனுப்பப்பட்டுள்ளன. மாவட்டங்களில் கடுமையான கண்காணிப்பை வைத்திருக்கவும், வெளிநாட்டு பயணங்களை மேற்க்கொண்ட நபர்களை முறையாகக் கண்காணித்தல்  போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மரபணு வரிசைமுறை குறித்த தகவல்கள் தொடர்ந்து மாநிலங்களுடன் பகிரப்பட்டு வருவதாக மருத்தவர் சுஜீத் குமார் சிங் கூறியுள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்