Aran Sei

அணையாமல் சிதையில் எரியும் தீ – கண்ணீரால் அணைத்துவிடமுடியுமா என்ன?

டெல்லியில் தொடர்ந்து ஏழாவது நாளாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. சீமாபுரி தகன கூடத்தில் தொடர்ந்து உடல்கள் எரிந்து கொண்டே இருப்பதால் காற்றிலும் புகைமூட்டமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

”இன்றைய தினத்திற்கு இது 80வது உடல், இன்னும் தொடர்ந்து வரும்” என அந்தத் தகன கூடத்தில் பணிபுரியும் ஊழியர் தெரிவிக்கின்றார்.

Photo Credit : The Wire

கொரோனா பரவலால் தொடர்ந்து 7 நாட்களாக, 300க்கும் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊனமுற்ற மருத்துவ கட்டமைப்பு வசதிகள், அதன் கடைசி காலில் நின்று கொண்டிருப்பதால், நகரில் உள்ள பல்வேறு மக்கள்  உயிர்வாழவே போராடிக் கொண்டிருக்கின்றனர். படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், கல்லறைகளும், தகனக் கூடங்களும் நிரம்பி கிடப்பதால், அங்கும் இடங்களுக்காக மக்கள் போராட வேண்டிய நிலை உள்ளது.

சீமாபுரியில் உடல்கள் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருக்கின்றன. அரை மணி நேரத்திற்கு ஒரு உடல் வந்து கொண்டிருக்கிறது. அதிர்ச்சியில் உறைந்திருக்கும், குடும்பத்தினர் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களில் தீ வைக்கின்றனர்.

Photo Credit : The Wire

சிலர் உடல் எரிந்த பிறகும், எதையோ வேடிக்கை பார்த்தவண்ணம் அங்கேயே அமர்ந்து விடுகின்றனர். சிலரோ, தங்கள் உயிரைப் பாதுகாக்கவோ அல்லது மருத்துவமனையில் இருக்கும் வேறு ஒருவரை பார்த்துக்கொள்ளவோ விரைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பி சென்று விடுகின்றனர்.

சீமாபுரியில் உடல்கள் எரியூட்டப்படுவதற்கு உதவியும், மேற்பார்வையும் புரிந்து வரும் ஷாகீத் பகத் சிங் சேவா தள் அமைப்பின் நிறுவனர் ஜிதேந்திர சிங் ஷன்டி, ”நான் பிழைத்து இருப்பேனா என்பது எனக்குத் தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

Photo Credit : The Wire

”நேற்று ஒரு இளைஞரின் உடலைத் தகனம் செய்தோம். இன்றைக்கு அதே ஆம்புலன்ஸில் அந்த இளைஞரின் தாயாரின் உடல் வந்தது. என் இதயம் நொறுங்கி விட்டது” என அவர் கூறினார்.

“என் நண்பர்கள் டெல்லியை விட்டு வெளியேறத் தொடங்கி விட்டனர். இங்கு இவ்வளவு வலியுடன் தங்களால் வாழ முடியாது என கூறுகின்றனர்” என ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

அவர் பேசிவிட்டு எழுந்ததும், உடல்கள் எரியும் ஓசையைத் தாண்டி ஒரு ஆம்புலனைஸின் ஒலி கேட்கிறது.

மற்றொரு உடல் வந்திருக்கிறது.

மீண்டும் பணி தொடங்கியது.

சீரஜ் அலி (தி வயர் இணையதளத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்