Aran Sei

பீமா கோரேகான் வழக்கு : பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமிக்கு பிணை மறுப்பு

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளரான 83 வயது தந்தை ஸ்டான் சுவாமிக்கு, சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ), 83 வயதான, பழங்குடி மக்கள் உரிமைக்காகப் போராடிவரும் யேசு சபையைச் சேர்ந்த பாதிரியாரான ஸ்டான் சுவாமியைப் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் கைது செய்து தலோஜா மத்திய சிறையில் அடைத்தது.

அதைத் தொடர்ந்து, மாவோயிஸ்ட்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகத் தான் ஸ்டான் சுவாமி இருப்பதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்  பிரகாஷ் ஷெட்டி சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் வாதிட்டார்.

மாவோயிஸ்ட்களுக்காக வேலை செய்கிறார் ஸ்டான் சுவாமி – தேசிய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு

விஸ்தாபன் விரோதி ஜான் விகாஸ் அந்தோலன் மற்றும் சிவில் லிபர்ட்டிக்கான மக்கள் சங்கம் போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளுக்குச் சுவாமி ஒரு தீவிர ஆதரவாளராக இருந்தார் என்றும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் தனது ஈடுபாட்டைக் காட்டும் கோப்புகளை,  ஆதாரங்களை அப்புறப்படுத்த முயன்றார் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், அந்தக் கோப்புகளை என்ஐஏ மீட்டெடுத்தது என்று கூறிய வழக்கறிஞர் பிரகாஷ் ஷெட்டி, சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காகவே ஸ்வாமி இவ்வாறு செய்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

சட்டத்திற்கு எதிரான குற்றங்களில் தான் இதுவரை ஈடுபட்டு ஈடுபடவில்லை என்றும் தனக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறும் என்ஐஏ,அப்படியான ஆதாரங்களை இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றும் அதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தந்தை ஸ்டான் ஸ்வாமி கோரியிருந்தார்.

அர்னாபுக்கு உடனடி ஜாமீன்; ஸ்டான் சாமிக்கு ஒரு உறிஞ்சு குழல் கூட தரமுடியாது – நீதியின் மறுபக்கம்

மேலும், அதனால் தனக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (ஊபா) பொருந்தாது என்றும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 22) தந்தை ஸ்டான் சுவாமியின் பிணை மனுவை விசாரித்த தேசியப் புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு  நீதிபதி டி.இ.கோத்தலிகர் பிணை பெறுவதற்கான சட்டரீதியான தகுதியின் அடிப்படையிலும் மருத்துவ காரணங்களின் அடிப்படையிலும் பிணை வழங்க முடியாது என்பதால் இந்த மனுவை நிராகரிக்கிறேன் என கூறியதாக  பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்