எல்கர் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே, கடந்த வாரம் மாவோயிஸ்ட் தலைவரான தனது சகோதரர் மிலிந்த் டெல்டும்டே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, அவரது தாயுடன் ஐந்து நிமிடம் தொலைபேசியில் பேச, தேசிய புலாய்வு முகமையின்(என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மகாராஷ்ட்ரா மாநிலம் தலோஜா சிறையில் ஆனந்த் டெல்டும்டே அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம்(நவம்பர் 16), சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் ஆனந்த்தின் தாயாருடன் தொலைபேசியில் உரையாட அனுமதிக் கோரி சமர்பிக்கப்பட்ட அவரது மனுவை ஏற்றுக்கொண்டது. அதைத்தொடர்ந்து, இந்த அனுமதி குறித்து விரிவான உத்தரவு நேற்று(நவம்பர் 17) வெளியிடப்பட்டுள்ளது.
ஆனந்த் டெல்டும்டே தனது மனுவில், சகோதரர் மிலிந்தின் இறப்பிற்குப் பிறகு அவரது 90 வயதான தாய் அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருப்பதாக கூறியிருந்தார். அம்மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.இ.கோதாலிகர் அனுமதித்தார்.
“தலோஜா மத்திய சிறை கண்காணிப்பாளர், குற்றம் சாட்டப்பட்ட எண்.10 (ஆனந்த டெல்டும்டே) தொலைபேசியை ஸ்பீக்கரில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு அவரது தாயாருடன் தொலைப்பேசியில் பேச அனுமதிக்க வேண்டும். மறுபுறம் பேசும் நபர் குற்றம் சாட்டப்பட்டவரின் தாய் ஒருவர் மட்டுமே என்பதை கண்காணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.