Aran Sei

கொரோனா தடுப்பு மருந்து : பாஜகவின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு – சு.வெங்கடேசன்

எந்த ஆய்வுச்சட்டத்தின் வழிகாட்டுதலில் மத்திய அரசு கொரோனா தடுப்பு மருந்தை அனுமதித்துள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுதும் கொரானா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது அதற்கான தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியில் அரசுகள் ஈடுபட்டுள்ளன. அவசரகதியில் தடுப்பு மருந்து செலுத்துவதால் பின்விளைவுகள் ஏற்படலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா செனேகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கொரேனா தடுப்பு மருந்தை, சீரம் இந்தியா நிறுவனம், இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. இம்மருந்தை மக்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “’தடுப்பூசி அவசரமானது அவசியமானது’ என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சரியான மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்றி அனுமானத்தின் அடிப்படையில் கோவாக்சுனுக்கு அனுமதி அளித்திருப்பது, இந்திய ஆய்வுக்கட்டமைப்பின் நம்பிக்கையையே சிதைப்பதாக உள்ளது. ஒரு வாக்சினின் பாதுகாப்பு குறித்து தெளிவான உலக ஆய்வு வரையறை உள்ளது. இந்த அனுமதியும் அங்கீகாரமும்  அந்த வரையறையின் படி அமையவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

எந்த ஆய்வுச்சட்டத்தின் வழிகாட்டுதலில் மத்திய அரசு அனுமதித்துள்ளது?  கேள்வி எழுப்பிய அவர், ஒருவேளை அரைகுறை ஆய்வுகளோடு வெளிவரும் கோவாக்சின் ஏதேனும் பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது கோவாக்சினின் தோல்வியாக மட்டும் முடியாது. ஒட்டுமொத்தமாக வாக்சின்கள் மீதான நம்பிக்கையையே சிதைத்துவிடும். வெகுசன மக்கள் தடுப்பூசிகளையே புறக்கணிக்கத் துவங்கினால் அதன் விளைவு கொடிதினும் கொடிது என்றும் தெரிவித்தார்.

“தவறான வாக்சின் அந்த வைரசையே பலம் பொருந்திய வீரியமானதாக மாற்றிவிடக் கூடாது. கூடவே” இப்போதைய புதிய வீரிய வைரசுக்கும் இத்தடுப்பூசி பயன்படும்;110 சதவீத பாதுகாப்பு” என்றெல்லாம் கூச்சலிடுவது இந்திய அறிவியல் உலகையே எள்ளி நகையாடச்செய்கின்றது. ’’தற்சார்பு, இந்திய தயாரிப்பு’ சித்தாந்தங்களை தன் அரசியல் ஆயுதமாக எடுக்கும் பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு போலத்தான் இந்த அவசரகதி அங்கீகாரம் உள்ளது” . என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்