Aran Sei

கொரோனாவும் மன நலமும்: மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

நுரையீரலுக்கும் மனதிற்கும் இடையே ஆன நல்லுறவு பாதித்தால் ஏற்படும் தீ வினைகள்; காற்றை பிரிக்கும் நுரையீரலுக்கும் காற்று உட்புகாத மனதிற்கும் உள்ள தவிர்க்க முடியாத உறவினை நாம் காண்போம்.

கொரோனா இந்திய நாட்டில் கோரத்தாண்டவம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கட்டுக்கடங்காத நிலையில் கொரோனா பரவி வருகிறது. நுரையீரலிற்கு பின் அதிகம் பாதிப்படைவது மனித மனமே.

கொஞ்சம் இடைவெளி பிளீஸ்…
கொரோனவால் ஏற்பட்ட முக்கிய பக்க விளைவு, சக மனிதர்களுடன் சகஜமான தொடர்போடு பழக முடியாத ஒரு சங்கட நிலை. காற்றினில் கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண் கிருமி பரவ, அதற்கு எதிரான மருந்தும், தடுப்பூசியும் நம்மிடம் கடந்த வருடம் இருக்க வில்லை. அதனால் தனிமை படுத்துதல் என்பது இன்றியமையாத ஒரு விதி ஆகி விட்டது. முக்கியமாக நகர் புறங்களில், இணை நோய்யுடைய வயதான மக்கள் அதிகம் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். தனிகுடும்பங்கள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மழலைகளும் அதிகம் பாதிக்கப் பட்டனர். கிராம புரங்களை விட நகர் புறங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் இவ்வாறான நிலை உண்டாகியது.

மனிதன் ஒரு விலங்கு, ஒரு சமூக விலங்கு என்று கூறலாம். கொரோனாவால், இந்தச் சமூக விலங்கிற்கு சமூக இடைவெளி நிர்பந்தம் ஆக, அவனது உட்கருவை இது சீர்குலைத்தது.

மன அழுத்தத்திற்கு காரணம் என்ன? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

பதற்றம், அழுத்தம்…

கொரோனாவில் இரு மனரீதியான நோய்கள் அதிகம் காணபட்டன, மன பதற்றம்( anxiety disorder), மன அழுத்தம் (depression disorder). சிலருக்கு பதற்றமும் அழுத்தமும் கலந்து mixed disorder என்ற கலவை நோய் உண்டாகியது.பொதுவாக ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படும்பொழுது மனதிற்கு ஒரு சோர்வு நிலையோ அல்லது ஒரு பதட்ட நிலையோ ஏற்படுவது இயற்கை. ஆனால் நமக்குக் கடந்த ஒரு ஆண்டு காலம் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இயர்க்கையினால் என்றாலும் கூட அது மனித இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு நிலை ஆகி விட்டது.

மது மனநோயா? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

அழுத்தம் ஏன்?

மனிதன் எதிர்பாராத விபத்துகளைச் சந்திக்கும்போது அவனது மனம் சரி வர ஏற்று கொள்வதில்லை.பலர் அசம்பாவிதமாக தங்களுக்கு நெருங்கியவர்களையோ, உற்றார் உறவினரையோ இழக்க நேரிட்டனர். நல்ல உடல் நலத்துடன் இருந்த நபர்களின் உயிர் திடீர் என்று கொரோனாவால் பறிக்கப்பட்டத்தை, பலரால் ஏற்று கொள்ள முடியவில்லை. பலருக்கு வேலை போய்விட்டது, வாழ்வாதாரம் நிலை இல்லாமல் ஆகிவிட்டது. சகஜமான பழக்கமின்றி பல வயோதிகர்கள், தனிமைக்கு உள்ளாக்கப்பட்டு மன அழுத்தத்துடன் காணப்பட்டனர். ஏற்று கொள்ள முடியாத கருத்து/சம்பவங்களால் மனிதனின் மன சமநிலை தடுமாறியது. இது காணப்படும் பல்லாயிரக் கணக்கான காரணங்களில் சில காரணமாகும். இந்த மன அழுத்தம் மனிதனை உந்துதலின்றி மாற்றிவிடும், சோர்வடைய செய்து, ஆக்கம் இல்லாத ஒரு மனிதனாய் அது மாற்றி விடும்.

ஐந்து மடங்காக உயர்ந்திருக்கும் ஆக்சிஜன் தேவை – நாளொன்றுக்கு 100 டன் தேவைப்படுவதாக  ராஜீவ் காந்தி மருத்துவமனை தகவல்

பதற்றம்?

வாழ்கையில் பிரச்னைகள் இருப்பதும், அதனை சமாளித்து கடந்து வருவதும் இயல்பு. கொரோனாவினால் பலருக்கு வாழ்க்கை கேள்வி குறியாகி விட்ட நிலையில் பொதுவாக நிலவி வந்த பதற்றம், மன பதற்றமாக மாறியது. பலருக்கு கொரோனா என்னும் கொடுங்கோலன் நம் உயிரையும் கொய்து விடுவானோ என்ற பதற்றம், வேலை போய் விடுமோ என்ற பதற்றம், போன வேலை திரும்பிக் கிடைக்குமா என்ற பதற்றம், வேலை போய்விட்டது வீட்டில் வருமானம் இல்லை என்ற பதற்றம், பரிட்சை எழுத வேண்டும்/வேண்டாம் என்ற பதற்றம், மனைவி/ காதலி பல மாதங்களாக காண முடியவில்லை என்ற பதற்றம், அயல்நாட்டில் வேலைக்குச் சென்றவர் வீட்டிற்க்கு வருவாரா என்ற பதற்றம், என்று காரணங்களைக் கூறி கொண்டே போகலாம். பதற்றம், ஒரு சம நிலையல்லாத மனம்; அலைபாயும் நிலை, அந்த அலைபாய்சலில் ஒரு முடிவு எடுக்க முடியாது மனம் தடுமாறும். அமைதியற்ற ஒரு நிலையில் படபடப்பு மூச்சு திணறல், நெஞ்சு வலி போன்ற உடல் நலிவுகள் ஏற்படும்.

‘எங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை பெற மத்திய அரசின் காலில் விழக் கூடத் தயார்’ – மகாராஷ்ட்ரா அமைச்சர்

நிலை.

கொரோனா என்று ஒரு சம்பவம் நிகழும், அனைத்து தரப்பின மக்களும் பாதிக்கப் படுவார்கள் என்று 2019 ஜனவரி மாதம் யாரேனும் கூறியிருந்தால், அவரை பார்த்துச் சிரித்து விட்டுச் சென்றிருப்போம். இது ஒரு அசாதாரண நிலை என்பதையே இன்றும் பலர் ஏற்க மறுக்கிறார்கள். இந்த மன அழுத்தம்/பதற்றம், இள/நடு தர வயதுடையவர்களை விட முதியவர்களையும், சிறியவர்களையும் அதிகம் பாதித்துள்ளது.

ஓடி விளையாடும் மழலை குழந்தைகள் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. பிற நபர்களுடன் பழகி ஏற்படும் சமூக அறிவு ஏற்படுவதற்கு வாய்ப்பற்று போனது. தனிமை என்ற கொடூர நிலையை அவர்கள் மனம் பக்குவம் அடையும் முன்பே சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இணை நோய் இருந்ததால், முதியவர்கள் சொந்த வீடுகளில் சிறை கைதிகளாக மாற வேண்டிய அவல நிலை.

தீர்வு?

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு”
– கவிஞர் கண்ணதாசன். இந்த அறிவுரை பெரியவர்களுக்கு. பாடல் வரிகளா அறிவுரை? இந்தப் பாடல் வரிகள் mindfulness என்ற மனம் நிரம்பிய நிலையைக் குறிக்கின்றது. எந்த ஒரு நொடி பொழுதிலும் அந்த நொடியானது ஒரு பரிசு என அறிந்து முழுவதும் அந்த நொடியில் வாழ்வது ஆகும். சில நேரங்களில் நம் வாழ்கையில் அர்த்தமே இல்லை என்று நாம் எண்ணலாம். ஆனால் வாழ்வில் நம்மை விட குறைந்த அதிர்ஷ்டம் உள்ள மனிதர்களை எண்ணி பார்த்து, அவர்களிடமிருந்து தன்னம்பிக்கை பெற வேண்டும்.

வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சிறு பிள்ளைகளுக்குப் பெரியவர்கள் நேரம் ஒதுக்கி அவர்களுக்குக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்குப் போதிய அளவு மூளைக்கு சவாலான விளையாட்டுகளில் ஈடு படுத்தி அவர்களின் மன நலத்தை பேண வேண்டும்.

‘கொரோனா தடுப்பூசி என்று தெரியாமல் திருடி விட்டோம்’ – வருத்தம் தெரிவித்து திருடியவற்றை திரும்ப கொடுத்த திருடர்கள்


.
யோகா, மூச்சு பயிற்சி, உடல் நிலை பயிற்சி என மனதை அமைதி படுத்தும் பல்வேறு பயிற்சிகளை நாம் செய்யலாம். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் ஜேக்கப்சன் (jacobson) தசை தளர்வு பயிற்சிகளைச் செய்யலாம்.

இந்தப் பயிற்சி முறைகள் பயன்படாமல், வியாதியின் அளவு அதிகமாக இருக்கும் எனில், மன நல மருத்துவரைக் கண்டு நேரில் ஆலோசனை/ சிகிச்சை பெறுவதே சிறந்தது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்