தண்டனை பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தோ, அரசியல் கட்சியின் அலுவலகப் பொறுப்பில் செயல்படுவதிலிருந்தோ தடுக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தண்டனை பெற்ற அரசு ஊழியர்களைப் பணியில் ஈடுபடவிடாமல் வாழ்நாள் முழுவதும் தடை செய்வதுண்டு. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை அரசு ஊழியர்களுடன் ஒப்பிட முடியாது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், சிறைத்தண்டனையின் காலத்திற்கும், அதன் பின்னர் ஆறு ஆண்டுகளுக்கும் தகுதி நீக்கம் செய்வதே சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமானது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அரசியலில் குற்றங்களைக் குறைப்பதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆயுள் காலத்திற்கும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, மத்திய அரசின் நிலைப்பாடும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்ட நிலைப்பாடும் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயின் மனுவை அடிப்படையாகக் கொண்ட இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் தகுதி நீக்க நடவடிக்கை நீதித்துறை, நிர்வாகத் துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய அனைவர்க்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டுள்ளார். ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்கும் பாகுபாடு காட்டக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8-ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படும் எம்.பிகளும் எம்எல்ஏக்களும் ஆயுளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று அஸ்வினி உபாத்யாய் கூறியுள்ளார்.
“இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), பணமோசடிச் சட்டம், அந்நியச் செலாவணி மீறல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) அல்லது லஞ்ச வழக்குகள் ஆகியவற்றின் கீழ் குற்றம்சாட்டப்படும் ஒரு அரசு ஊழியர் ஆயுளுக்கும் அவரது பணியில் ஈடுபடுவதிலிருந்து தடை செய்யப்படுகிறார். இதே குற்றங்களில் ஈடுபடும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சிறிது காலத்துக்குத்தான் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்” என அவர் வாதிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிப்பிட்ட ‘சேவை நெறிமுறைகளின்’ (service conditions) கீழ் கட்டுப்படுத்த முடியாது என்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. மற்றவர்களைப் போலவே ஐபிசியின் கீழ் உள்ள குற்ற தண்டனைகள் அவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அது கூறியுள்ளது. ஒரு அரசு ஊழியருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் எந்தப் பாகுபாடும் இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.