Aran Sei

இந்துக்களின் ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர் : சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்யநாத்

credits : The Print

ஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் (12-9-21) உத்தர பிரதேச மாநிலம், குஷிநகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ”1947 ஆம் ஆண்டு தொடங்கிய அரசியல் சாதி, மதம், மொழி, மாநிலம், குடும்பம் எனும் எல்லைக்குள் மட்டும் தான் செயல்பட்டு கொண்டிருந்தது. நமது பிரதமர் நரேந்திர மோடி தான் அரசியலை கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் வரை கொண்டு சேர்த்தார்” என்று கூறியுள்ளார்.

”பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் சார்பு அரசியல் (சிறுபான்மையினருக்கு ஆதரவான) கிடையாது” என்று கூறிய அவர், ”2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரேஷன் பொருட்களைப் பெற்றீர்களா? என மக்களை நோக்கி கேள்வியெழுப்பினார். பின்னர், ”அந்தக் காலகட்டத்தில் அப்பா ஜான் ( (உருது மொழியில் இஸ்லாமியர்கள் தந்தையை அழைக்கும் சொல்) என்று அழைப்பவர்கள் தான் ரேஷன் பொருட்களை உண்டு செரித்தனர். ஸ்ரீநகருக்கு வர வேண்டிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் நேபாளத்துக்கும், வங்காளதேசத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வரும் சூழலில், ட்விட்டரில் அப்பா ஜான் (Abba Jaan) எனும் ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது.

யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பல்வேறு நபர்கள் மத பாகுபாடின்றி, தங்கள் தந்தையுடன் இருக்கும் புகைபடத்தை ட்விட்டரில் பகிர்ந்து அப்பா ஜான் எனும் ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

 

இது தொடர்பாக, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, ”ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக, மூர்க்கத்தனமான மதவெறி மற்றும் இஸ்லாமிய வெறுப்பு என்கிற ஒரே கொள்கையைத் தான் பயன்படுத்துகிறது என்பதை நான் தொடர்ச்சியாக கூறி வருகிறேன். இந்துக்களுக்கு செல்ல வேண்டிய ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர் என கூறி ஒரு முதல்வர், மறுதேர்தல் வேண்டும் என கூறுகிறார்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்