Aran Sei

டிஎன்பிசி தேர்வு விண்ணப்பத்தில் சர்ச்சை கேள்வி – தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த எஸ்.டி.பி.ஐ. கட்சி

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) பதிவு விண்ணப்பத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் கோரும் துணைக் கேள்வி ஏன்? சமூகநீதிக்கெதிரான அநீதியை களைய தமிழக முதல்வருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப்-2 தேர்வுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) இணையதளத்தில் பதிவு செய்யும்போது, மதம் என்கிற பகுதியில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் Whether muslim by birth or converted? பிறப்பிலேயே இஸ்லாமியரா? அல்லது மதம் மாறியவரா? என்று துணைக் கேள்வி கேட்கப்படுகிறது. ஆனால் மற்ற மதங்களுக்கு அந்த துணைக் கேள்வி என்பது இல்லை. இதற்கு முன்னர் இதுபோன்ற கேள்விகள் இல்லாத நிலையில், இஸ்லாமியர்களுக்கு மட்டும் துணைக் கேள்விகளை கோரும் இந்த புதிய நடைமுறை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி.யில் பதிவு செய்து தேர்வு முடிந்த பின்னரே விண்ணப்பித்தவர் பிறவியிலேயே இஸ்லாமியரா? அல்லது மதம் மாறியவரா என்ற அடிப்படையில் தரம் பிரித்து, பிறவியின் அடிப்படையில் இஸ்லாமியராக உள்ளவர்களுக்கு மட்டுமே 3.5%  உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இஸ்லாமியராக மாறியவருக்கு அது நிராகரிக்கப்பட்டது. அதுவே ஏற்றுகொள்ள முடியாத சூழலில், தற்போது விண்ணப்பிக்கும்போதே தரம் பிரித்து தேர்வு எழுதக்கூட அனுமதி மறுப்பது என்பது கண்டனத்திற்குரியது.

ஒருவர் எந்த மதத்தை ஏற்றுக்கொள்ளவும், அதன் பிரகாரம் நடக்கவும் அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ள நிலையில், நம்பிக்கையின் அடிப்படையில் பிற மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட காரணத்திற்காகவே, வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் அவருக்கான முந்தைய சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.  முந்தைய சலுகைகள் மறுக்கப்பட்டு வரும் அதே சூழலில், அவர் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்ட மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளையும் தர மறுப்பது என்பது அநீதியானதாகும்.

பி.சி. பிரிவை சேர்ந்த ஒருவர், அதே பிரிவில் உள்ள முஸ்லிமாக தன்னை மாற்றிக்கொண்டால், அவரை ஓ.சி. பிரிவில் சேர்ப்பது என்பது ஏற்புடையதல்ல. அதன்மூலம் அவருக்கான உரிமையை மறுப்பது எந்தவிதத்திலும் நியாயமான நடவடிக்கையாக இருக்க முடியாது.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துங்கள் – அரசியல் சாசன அமைப்புகளுக்கு பத்திரிக்கையாளர்கள் குழு வேண்டுகோள்

பிற மதத்திலிருந்து இஸ்லாமியராக மாறியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு பொருந்தாது என்றோ அல்லது இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கக்கூடாது  என்றோ எந்த அரசாணையும் இல்லாத சூழலிலும், அதுமாதிரியான கோரிக்கை இஸ்லாமிய சமூகத்திடமிருந்தும் எழாத சூழலிலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் திட்டமிட்டு அதனைத் திணிப்பது கண்டனத்திற்குரியது.

இஸ்லாமியராக மதம் மாறிவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க கூடாது என்ற இந்துத்துவ அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் முகமாகவே டி.என்.பி.எஸ்.சி. யின்  இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. ஆகவே, நீதிக்கட்சியின் ஆட்சி, சமூகநீதியின் ஆட்சி என தனது தலைமையிலான அரசைக் குறிப்பிட்டுச் சொல்லும் தமிழக முதல்வர் அவர்கள், சமூகநீதிக்கெதிரான இத்தகைய அநீதியை களைய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே கலாச்சார ரீதியான உறவுள்ளது – இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் கருத்து

இதுதொடர்பாக ஏற்கனவே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.அப்துல் கறீம், முதல்வர் தனிப்பிரிவு, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு  மனு அளித்துள்ளார். அந்த மனு மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்