Aran Sei

தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை – உள்துறை நிலைக் குழு அறிக்கை

Image Credits: DNA India

ரவலாகத் தொற்று ஏற்படும் காலகட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் மீது கட்டுப்பாடுகளை வைத்திருக்கவும், மருந்துகளை கள்ள சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கவும் பொருத்தமான விதிகளுடன் கூடிய விரிவான பொது சுகாதாரச் சட்டம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை நிலைக் குழு, மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகள், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் அதிக விலையைப் பெற்றுக்கொண்டு நோயாளிகளை, அனுமதிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரு விரிவான பொது சுகாதாரச் சட்டத்தை இந்தக் குழு தீர்க்கமாகப் பரிந்துரைக்கிறது. தனியார் மருத்துவமனைகள் அதிக பணத்தை வசூலிப்பதாகச் செய்திகள் வந்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அளவில் பொருத்தமான சட்ட விதிகளை கொண்டு வருவதற்கான அவசியங்கள் உள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருந்துகளை கள்ள சந்தைகளில் விற்பது மற்றும் தயாரிக்கப்படும் மருத்துவ பொருட்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஆகியவற்றை சோதனை செய்வதற்கு இந்தச் சட்டம் உதவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில், கொரோனாவை கட்டுப்படுத்திய மருந்துகள் அதிக விலையில் விரிக்கப்பட்ட குழப்பத்தைக் குறித்தும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலிவான மற்றும் பயனுள்ள மாற்று மருந்துகள் குறித்து அரசு மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து, அவர்கள் பெரும் தொகைகளை செலவழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காப்பீடு

தொற்றின் ஆரம்பக் கட்டத்தில், கொரோனாவிற்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படவில்லை என்று குழு கூறியுள்ளது. தனியார் மருத்துவமனைகள் பெரும் தொகையை வசூலித்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அனைத்து மருத்துவமனைகளிலும் மக்கள் எளிதாகக் காப்பீட்டை பெரும் வகையில் விதிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். காப்பீடு உள்ள அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையை வழங்க வேண்டும் என்று குழு பரிந்துரைக்கிறது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையாகச் செயல்படுவதற்கான நடைமுறைகளை கொண்டு வந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை இந்தக் குழு பாராட்டியுள்ளது.

“எதிர்காலத்தில் கொரோனா போன்ற தொற்றை சமாளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனி பிரிவை உருவாக்க வேண்டும். தொற்றை கட்டுப்படுத்த, பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் அரசு நிறுவனங்களை இணைப்பதில் இந்தப் பிரிவு முக்கிய பங்கு வகிக்க வேண்டும்” என அறிக்கை தெரிவித்துள்ளது.

தொற்றின்போது, சமூகக் களங்கம் மற்றும் தனிமைப்படுத்துவதற்கான பயம் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

திட்டங்களை செயல்படுத்தல்

கொரோனா, பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைச் சரிசெய்ய, அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், பல திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று குழு கூறியுள்ளது. “இந்த திட்டங்கள் அடிமட்டத்தில் இருந்து செயல்படுத்தப்பட வேண்டும். கடன்களைப் பெறுவதில் விவசாயிகள், கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்கள் மற்றும் பண்ணை அல்லாத சிறு / குறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்” என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார மறுமலர்ச்சிக்காகக் கூடுதல் தலையீடுகள் மற்றும் திட்டங்கள் தேவை என்று அறிக்கை கூறியுள்ளது. குறிப்பாகச் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்தத் திட்டங்கள் தேவை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதிய உணவுத் திட்டம்

9 மாதங்களுக்கு மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சிறுவர்களுக்கு மதிய உணவு கிடைப்பதில்லை என்று இந்தக் குழு கூறியுள்ளது. பல மாநிலங்கள் ரேஷன் பொருட்களை சிறுவர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் திட்டங்களை அறிமுகம் செய்தது, ஆனால் இதுவும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது..

“எனவே, உள்துறை அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, உள்ளூர் நிர்வாகங்கள் சரியான நேரத்தில் உணவு/ ரேஷன் வழங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று குழு பரிந்துரைக்கிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கும் வரை இந்தப் பணிகள் தொடர வேண்டும்” எனவும் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான நாடாளுமன்ற உள்துறை நிலைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்