Aran Sei

தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – அச்சத்தில் வாகன ஓட்டிகள்

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையைத் தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றன. கடந்த ஒன்பது நாட்களில் எட்டாவது முறையாக விலை அதிகரித்துள்ளது. இன்று, டெல்லியில் பெட்ரோல் விலை 82 ரூபாயாகவும் டீசல் விலை 72 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

நிறுவனங்களின் விலை அறிவிப்பின்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு. 81.89 ஆக இருந்து 82.13 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 71.86 ரூபாயிலிருந்து 72.13 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த 8 நாள் விலை உயர்வுக்கு முன்பாக, பெட்ரோல் விலை கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் மாற்றப்படாமலும், டீசல் விலை அக்டோபர் 22-ம் தேதி முதல் மாற்றப்படாமலும் இருந்து வந்தது.

இதேபோல, மார்ச் 17 முதல் ஜூன் 6-ம் தேதி வரையில் 85 நாட்களும், ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரையிலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது. இப்போது, தொடர்ந்து 8-வது நாளாக விலை அதிகரித்துள்ளது

ஒன்பது நாட்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.07 ஆகவும், டீசல் வீதம் 1.67 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை சர்வதேச எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்தின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் திருத்துகின்றன.

மும்பையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.51 ரூபாயிலிருந்து 88.81 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் விலை 78.38 ரூபாயிலிருந்து 78.66 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளூர் விற்பனை வரி அல்லது மதிப்புக்கூட்டு வரியைப் பொறுத்து எண்ணெய் விலையில் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

எண்ணெய் விலையேற்றம் குறித்து அரண்செய், ஆய்வாளர் குணசேகரிடம் கருத்துக் கேட்டபோது “பெட்ரோல், டீசலின் விலையேற்றம் மக்களைப் பாதிக்கும். பெட்ரோல் டீசல் விலையை அரசு முறைப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ச்சியாக எண்ணெய் விலையேறினால் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறும். விலை நிர்ணயிக்கும் உரிமையை அரசே செய்யும் போதுதான் இதற்கு விடிவு பிறக்கும்” என்று தெரிவித்தார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்