Aran Sei

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – குணால் கம்ரா, ரச்சிதா தனேஜாவுக்கு நாளை நோட்டீஸ்

நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, கார்ட்டூனிஸ்ட் ரச்சிதா தனேஜா ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்குவது குறித்து நாளை தீர்ப்பு வழங்கப்பட்டவுள்ளது.

நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, உச்சநீதிமன்றத்தை விமர்சித்துப் பதிவு செய்திருந்த ட்வீட்களுக்கு எதிராக சில வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதைப் போலவே கார்ட்டூனிஸ்ட் ரச்சிதா தனேஜாவின் கார்ட்டூன்களுக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆதித்தியா காஷ்யப் எனும் சட்ட மாணவர் புகார் அளித்திருந்தார். 

நீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1971), அரசின் தலைமை சட்ட அதிகாரியின் அனுமதியை பெற்ற பிறகுதான் தனி நபர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய முடியும் என்று கூறுகிறது. இந்நிலையில், நவம்பர் 12ஆம் தேதி, அரசு வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், குணால் கம்ரா மற்றும் ரச்சிதா தனேஜாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர அனுமதியளித்தார். 

குணால் கம்ரா, “உச்ச நீதிமன்றம் தான் இந்நாட்டின் உச்ச நகைச்சுவை”, “முதுகெலும்புள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிபதிகளை ‘மரியாதைக்குரிய’ என்றழைப்பதை நிறுத்த வேண்டும். மரியாதை அந்த வளாகத்தை விட்டு சென்று பல காலம் ஆகிவிட்டது” என பதிவு செய்த ட்வீட்களால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு புகார் வைக்கப்பட்டுள்ளது. 

“பாஜக என்னுடைய அப்பா” என அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தை மிரட்டுவது போன்ற கார்ட்டூன் மற்றும் உச்ச நீதிமன்றத்தை ‘சங்கி நீதிமன்றம்’ என்று சொல்லி மூவர்ண கொடிக்கு பதிலாக காவிக் கொடியை வரைந்திருக்கும் கார்ட்டூன் ஆகியவற்றுக்காக ரச்சிதா மீது நீதிமன்ற அவமதிப்பு புகார் வைக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற அவமதிப்பு புகார் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதியளித்த அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், குணால் கம்ராவின் குறிப்பிட்ட ட்வீட்டை பற்றி, “இந்த ட்வீட் நீதிமன்றத்தை அவமரியாதை செய்வது மட்டுமல்லாமல், பொது மக்கள் உச்சநீதிமன்றம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் குலைப்பதாக இருக்கிறது” என தன் அனுமதி கடிதத்தில் தெரிவித்துள்ளார் என்கிறது பார் அண்ட் பெஞ்ச் இணையதளம். 

இன்று, நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் குறித்து, வழக்கறிஞர் நிஷாந்த் கட்னேஷ்வர்கரின் வாதத்தை கேட்டுவிட்டு, குணால் கம்ராவுக்கும், ரச்சிதாவுக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்குவது குறித்து நாளை தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்