Aran Sei

பிரசாந்த் பூஷனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தலைமை வழக்கறிஞரிடம் அனுமதிக் கடிதம்

வழக்கறிஞர் மற்றும் செயற்பாட்டாளரான பிரசாந்த் பூஷனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் அனுமதி கேட்டு வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதியிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 29 அன்று தி இந்து பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியில் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசியிருந்தார். இந்திய உச்ச நீதிமன்றம் பாரபட்சமாக இயங்குகிறது எனப் பேசியிருந்த பிரசாந்த் பூஷன், “இன்றைக்கு இருக்கும் பெரிய பிரச்சினையே, உச்சநீதிமன்றம் சுயமாக இயங்காததுதான். உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அடிபணிந்து போகத் தயாராக இருக்கிறது. தலைமை நீதிபதிகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொள்ளும் திறனை அரசு கைப்பற்றியிருக்கிறது. இதனால் ஒவ்வொரு தீர்ப்பையும் அரசால் கட்டுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.

நீதித்துறையை விமர்சித்துப் பேசியிருப்பதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சுனில் குமார் சிங், கே.கே.வேணுகோபாலிடம் அனுமதி கோரி கடிதம் எழுதியிருக்கிறார்.

நீதித்துறையை அவமரியாதை செய்ய நடக்கும் திட்டமிட்ட பிரச்சாரத்தில் பூஷனிற்குப் பங்கு இருக்கிறது என்கிறார் சிங். “இந்திய உச்ச நீதிமன்றத்தின் மரியாதைக்குரிய நீதிபதிகளுக்கு எதிராகப் பொறுப்பற்ற, அவமரியாதையான, ஒழுங்கற்ற அறிக்கைகளை தொடர்ந்து வெளியிடும் வெறுப்பாளராக பூஷன் மாறிவிட்டார்” என சிங் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன், ஜூன் மாதமும் இதே போல பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமரியாதை வழக்கு தொடரப்பட்டது. ஜூன் 27 மற்றும் 29 ஆம் தேதிகளில் ட்விட்டரில் இந்தியாவின் தலைமை நீதிபதி போப்டேவையும், உச்ச நீதிமன்றத்தையும் அதன் நீதிபதிகளையும் விமர்சித்து ட்வீட் செய்திருந்தார் பிரசாந்த் பூஷன்.

“வரலாற்றாளர்கள், அவசரகால நிலை இல்லாமலேயே எப்படி கடந்த ஆறு வருடங்கள் ஜனநாயகம் அழிக்கப்பட்டது எனப் பார்த்தால், அதில் உச்ச நீதிமன்றத்துக்கும், குறிப்பாக தலைமை நீதிபதிகளுக்கும் முக்கிய பங்கு இருக்கும்” என ஒரு ட்வீட்டில் கூறியிருந்தார்.

மற்றொரு ட்வீட்டிலோ, தலைமை நீதிபதி ஷரத் அர்விந்த் பாப்டே, ஒரு ஹார்லி டேவிட்சன் பைக்கில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “உச்ச நீதிமன்றத்தை முழு அடைப்பில் வைத்து குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிட்டு, நாக்பூரின் ராஜ்பவனில் பாஜக தலைவருக்குச் சொந்தமான ஐம்பது லட்சம் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் பைக்கை, ஹெல்மெட் கூட அணியாமல் ஓட்டிக்கொண்டிருக்கிறார் தலைமை நீதிபதி” எனத் தெரிவித்திருந்தார். பிறகு, பாப்டே பைக்கை ஓட்டிக் கொண்டிருக்கவில்லை, உட்கார்ந்து தான் இருந்தார் என மன்னிப்பும் கேட்டார்.

இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிரசாந்த் பூஷன் குற்றவாளி என ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனையில் இருந்து தப்பிக்க பூஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற போது, அவர் மன்னிப்பு கேட்க மறுத்தார். எனவே உச்ச நீதிமன்றம் அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்