Aran Sei

‘பாஜகவின் வீழ்ச்சியை புதுச்சேரி மக்கள் தொடங்கி வைப்பார்கள்’ – வீரப்ப மொய்லி நம்பிக்கை

நாட்டில் பாஜக வீழ்த்தப்படுவதன் தொடக்கமாக புதுச்சேரி தேர்தல் இருக்கும் என்றும் புதுச்சேரி தேர்தலில் மக்கள் பாஜகவுக்குத் தகுந்த பதிலடியைக் கொடுப்பார்கள் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக புதுச்சேரி மாநிலத் தேர்தல் பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 24) பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேர்காணல் அளித்துள்ளார்.

அதில், “நாட்டிலேயே பாஜக  வீழ்த்தப்படுவதன் தொடக்கமாகப் புதுச்சேரி தேர்தல் இருக்கும். காங்கிரஸ் கட்சி மூலம் ஜனநாயகத்தின் வலிமை உறுதிப்படுத்தப்படும். காங்கிரஸ் அரசு செயல்படக் கூடாது என்பதுதான் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடிக்குக் கொடுக்கப்பட்ட பணி. மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான மத்திய அரசானது, புதுச்சேரியின் ஜனநாயகத்தையே கொலை செய்துவிட்டது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘புதுச்சேரியில் பின்வாசல் வழியாக காலூன்ற முயலும் பாஜக, இது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே’ – திருமாவளவன்

“தற்போது சட்டமன்ற உறுப்பினர்களைப் பணம் மற்றும் அதிகாரத்தைக் காட்டி கவர்ந்து விட்டனர். ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களால் அல்ல, மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்ட நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவே காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அவர்களுக்கு ஓட்டு உரிமை அளித்தது ஜனநாயகத்தை மீறிய செயல்.” என்று வீரப்ப மொய்லி விமர்சித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நேரம் என்பதாலேயே கிரண் பேடி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மத்திய அரசு ஆட்டுவித்த பொம்மையாக இருந்தாலும், அரசுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கிரண் பேடியே மேற்கொண்டதாகவும் இதில் மத்திய அரசின் பங்கு எதுவுமில்லை என்றும் மக்களிடையே நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

“ஆனால் பாஜகவின் அதிகார செயல் மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளைக் காற்றில் வீசியதற்கு, புதுச்சேரி வாக்காளர்கள் தேர்தலில் தகுந்த பதிலடியைக் கொடுப்பர். மக்களைச் சென்றடைய வேண்டிய வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்ததன் மூலம் அவர்கள் (பாஜக) மிகப் பெரிய குற்றத்தைச் செய்துள்ளனர். இதற்காக மக்களே பாஜகவைத் தண்டிப்பர்.” என்று வீரப்ப மொய்லி தன் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அவர்களின் பண பலம், அரசியல் அதிகாரம் மற்றும் பிற கட்சிகளின் ஆட்சி குறித்த சகிப்பின்மை ஆகியவை இந்த நாட்டில் முடிவுக்கு வர வேண்டும். அதை மெய்ப்பிக்க புதுச்சேரி உண்மையான களமாக இருக்கும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்