கர்நாடக மாநில அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி, அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும் சட்டமேலவை உறுப்பினர்களும் ஐந்து நாட்களாக கர்நாடக சட்டப்பேரவைக்குள் இரவு பகலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று (பிப்பிரவரி 22) நன்பகல் ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி ஆளுநரிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யக் கோரியும் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
மேலும், சிவமொக்காவில் நடந்த வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்துமாறும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “சட்டப்பேரவையில் ஐந்து நாட்களாக காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் ஆளுநரை அணுகி மனு அளித்துள்ளோம். அவர் எப்படி தேசியக் கொடியை அவமதித்தார் என்பதை மக்களிடம் காங்கிரஸ் எடுத்துக் கூறும்” என்று கூறியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸார் பிரச்சினை செய்வதற்கு காரணம் கே.எஸ்.ஈஸ்வரப்பா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதுதான். அன்று செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமசந்திரர்(ராமர்), மாருதி(அனுமர்) ஆகியோரின் தேர்களில் காவிக்கொடி இருந்தது. அப்போது நம் நாட்டில் மூவர்ண கொடி இருந்ததா? இப்போது அது (மூவர்ண கொடி) நமது தேசியக் கொடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
காவிக்கொடி எதிர்காலத்தில் தேசியக் கொடியாக மாறலாம் – கர்நாடக பாஜக அமைச்சர்
டெல்லி செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்ற முடியுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இன்றில்லை, எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் நடக்கலாம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று சொன்னபோது மக்கள் ஒரு கட்டத்தில் சிரித்தார்கள். ஆனால், தற்போது அதைக் கட்டிக்கொண்டிருக்கிறோம் இல்லையா? அதே போல எதிர்காலத்தில், 100 அல்லது 200 அல்லது 500 ஆண்டுகளுக்குப் பிறகு, பகவ த்வஜ்(காவிக் கொடி) தேசியக் கொடியாக மாறலாம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
Source: PTI, New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.