Aran Sei

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பது இந்தியாவில் குற்றமா? – ட்விட்டர் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கண்டனம்

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்தில் ட்விட்டர் நிர்வாகம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினரின் அடையாளங்களை வெளிப்படுத்துவது, போக்சோ சட்டத்திற்கு எதிரானது என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  என்சிபிசிஆர் அந்த புகாரில் தெரிவித்திருந்தது.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு நீக்கப்பட்ட நிலையில், தற்போது கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் குடும்பத்தினர் அடையாளங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களை தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையத்தின் உறுப்பினர்களும் பகிர்ந்திருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் கணக்கு மட்டும் முடக்கப்பட்டிருப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) கே.சி. வேணுகோபால், “ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் இரட்டை நிலைப்பாட்டைப் பாருங்கள், மோடி அரசுக்கு நீங்கள் எவ்வளவு பயப்படுகிறீர்கள். அரசு அமைப்புகளையும் அதையே செய்திருக்கும்போது ராகுல் காந்தியை மட்டும் ஏன் தனிமைப்படுத்துகிறீர்கள்” என கேட்டிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ரந்தீர் சுர்ஜிவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங் போன்ற மற்ற கட்சித் தலைவர்கள் இதே புகைப்படங்களை பகிர்ந்தோடு மட்டுமல்லாமல், ராகுல் காந்தி பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை #மெயின் பி ராகுல் (நானும் ராகுல்) என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், ராகினி நாயக், அல்கா லம்பா, அம்ரிதா தவான், சுப்ரியா ஸ்ரீனேட் போன்ற காங்கிரஸ் பெண் உறுப்பினர்கள் இணைந்து கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த சம்பவத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமைதியாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்த பின்பு, இந்த பிரச்னையை நசுக்க அரசு கடுமையான தந்திரங்களை பயன்படுத்தி வருகிறது என அவர்கள் குற்றம்சாட்டினர்.

”இந்த கொடூரமான சம்பவம் பிரதமரின் இல்லத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்றுள்ளது. ஆனால் 8 நாட்களுக்குப் பிறகும் பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. டெல்லி காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறையின் அமைச்சர் அமித்ஷாவும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்தார்.

”பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்பது இந்தியாவில் குற்றமா?. அப்படியென்றால் ராகுல் காந்தி மற்றும் நாம் அனைவரும் அதை மீண்டும் மீண்டும் செய்து நீதியை உறுதி செய்வோம்” என அவர் கூறினார்.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்