Aran Sei

ஆளுநர் கூறியது உண்மையென்றால் மோடி, அமித்ஷா விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலயா மாநில ஆளுநர் கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில், “ஆளுநர் பேசியது உண்மை என்றால், பிரதமரும் உள்துறை அமைச்சரும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நேற்று (ஜனவரி 3), ஹரியானா மாநிலம் தாத்ரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியுள்ள சத்ய பால் மாலிக், “நான் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்து, விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசியபோது, விவசாயிகள் போராட்டத்தில் ஐந்நூறு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் உச்சப்பட்ச ஆணவத்துடன் ‘அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்?’ என கேட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

“நான் அவரிடம், ‘ஆமாம், நீங்கள் மன்னராக இருப்பதால்தான் அவர்கள் இறந்து போனார்கள்’ என கூறினேன்” என்று சத்ய பால் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு அநீதி விளைவித்தால் மீண்டும் போராட்டம் தொடரும் – ஒன்றிய அரசை எச்சரித்த மேகாலயா ஆளுநர்

தன் பேச்சிற்காக தான் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என்றாலும், நான் இதற்கு அஞ்ச மாட்டேன் என்று அவர் பின்னர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “பிரதமர் நாட்டிற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் அல்லது ஆளுநர் பொய் சொல்கிறார் என்றால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர் சத்ய பால் மாலிக் மற்றும் பிரதமருக்கு இடையேயான உரையாடல் ஒட்டுமொத்த நாட்டையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“பிரதமர் மோடி, அவரது அரசு மற்றும் பாஜகவின் விவசாயிகளுக்கு எதிரான முகம் அம்பலமாகியுள்ளது. ஆளுநர் பொய் சொல்கிறார் என்றால், அவரை பதவி நீக்கம் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், அவர் பேசியது உண்மைதான் என்றால், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், உழைக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘விவசாயிகள் போராட்டம் குறித்து நான் பேசினால் டெல்லியிலிருந்து அழைப்பு வரும்’ – மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்

“விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு எப்போது இழப்பீடு வழங்கப்படும் என்பதையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். மிஸ்டர். பிரதமர், விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக உயர்ந்த இந்திய அரசின் பதவியில் இருப்பவரின் மொழியா நீங்கள் பேசியது?” என்று ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, ஒன்றிய பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது அம்மாநிலத்தின் ஆளுநராக சத்யபால் மாலிக் பணியாற்றியுள்ளார்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான சத்யபால் மாலிக், ஒன்றிய பாஜக அரசால் கோவா, பீகார், ஒடிசா, ஜம்மு  காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும், இப்போது மேகாலயாவிலும் ஆளுநராக பணிபுரிய நியமிக்கப்பட்டவர்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்