Aran Sei

வன்முறையால் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்திக்க அனுமதி வேண்டும் – யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கடிதம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஐந்து கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடன் வன்முறை நடைபெற்ற லக்கிம்பூர் கேரிக்குள் நுழைவதற்கு அனுமதியளிக்குமாறு பாஜகவைச் சேர்ந்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கி, அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினர்.

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

லக்கிம்பூர் வன்முறை – அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியிட்ட பாஜக எம்.பி. வருண் காந்தி

இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.

வன்முறை நடைப்பெற்ற லக்கீம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அப்பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் முடக்கப்பட்டன. இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

வன்முறை நடைபெற்ற அன்று இரவு, ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி லக்கிம்பூர் கேரிக்கு செல்ல முயன்றபோது, உத்தரபிரதேச காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனால், காவல்துறையினருடன் பிரியங்கா காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இக்காணொளியை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

அக்காணொளியில், பிரியங்கா காந்தி, “வாரண்ட் அல்லது சட்டரீதியான உத்தரவை தாருங்கள். அவ்வாறு இல்லாமல், நீங்கள் என்னைக் காரில் ஏற்றி, வெளியேற்ற நினைத்தால், உங்கள்மீது கடத்தல் புகார் அளிப்பேன். இந்தப் புகார் காவல்துறைக்கு எதிராக இருக்காது, மாறாக உங்கள்மீது இருக்கும்.” என்று காவல்துறை அதிகாரியிடம் பிரியங்கா காந்தி எச்சரித்தும், அவரையும் அவருடன் வந்த காங்கிரஸ் தலைவர்களை கைது செய்த காவல்துறை அவர்களை அருகில் உள்ள கிராமத்தில் தடுப்பு காவலில் வைத்தனர்.

லக்கிம்பூர் வன்முறை: ‘ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்ய வேண்டும்’- திருமாவளவன் வலியுறுத்தல்

கைதாகி 28 மணி நேரங்களை கடந்த நிலையில், “நரேந்திர மோடி சார், உங்கள் அரசானது என்னை எஃப்ஐஆர் கூட பதிவு செய்யாமல் 28 மணி நேரமாக சிறை வைத்துள்ளது. ஆனால், விவசாயிகளை வாகனம் ஏற்றிக் கொலை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டவில்லை” என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், தான் சட்டவிரோதமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளேன் என்றும் என்னுடைய வழக்கறிஞரைக் கூட சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

நாடு முழுவதும் பிரியங்கா காந்தியின் தடுப்பு காவலுக்கு பலத்து கண்டனம் எழுந்தது. காங்கிரஸ் கட்சியினர் அவரை விடுவிக்கக் கோரி, போராட்டங்களை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, 36 மணி நேரத்திற்கு பின்னர், நேற்று(அக்டோபர் 5), அவர்மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், நேற்று(அக்டோபர் 5), அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில், “ராகுல் காந்தி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அக்டோபர் 6 ஆம் தேதி லக்கிம்பூர் கெரிக்கு வருகைதந்து, வன்முறையால் துயரடைந்துள்ள குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, உண்மை நிலையை நேரடியாகக் கண்டறியவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

லக்கீம்பூர் வன்முறை: அஜய் குமார் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் – பிரதமருக்கு சிபிஎம் எம்.பி கடிதம்

“உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து வரும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் லக்கிம்பூர் கேரிக்கு செல்ல உத்தரபிரதேச அரசு அனுமதித்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால், லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவுக்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி வருகைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்