Aran Sei

ட்விட்டர் விவகாரம்: ‘140 கோடி இந்தியர்களின் குரலை நசுக்கும் பிரதமர் மோடி’ – காங்கிரஸ் கண்டனம்

Image Credit : time.com

ட்விட்டர் நிறுவனத்தின் மீது ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ட்விட்டர் சொந்தமாக எதையும் எழுதவில்லை என்றும் ஒன்றிய அரசிற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராக எழுதுவது நம் நாட்டு மக்கள்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில், சமூக வலைதள நிறுவனங்கள் தன் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை அவ்வலைதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’அநீதிக்கெதிரான போராட்டம் தொடரும்’ – சிஏஏ போராட்டத்தில் கைதாகி பிணையில் வந்த மாணவர் பிரதிநிதிகள் பிரகடனம்

இது தொடர்பாக, ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “கருத்து சுதந்திரம் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து வகையிலான செயற்பாடுகளைக் கையாள்வது கவலை அளிக்கிறது. இந்திய சட்ட விதிமுறைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதேநேரம் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை கொள்கைகளின்படி நாங்கள் இயங்குவதே சரியானதாக இருக்கும். ஆகவே, இந்தப் புதிய விதிமுறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு, ஒன்றிய அரசுடன் திறந்தமனதுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ட்விட்டர் நிறுவனம் தயாராக உள்ளது.” என்று கூறியிருந்தது.

பாபர் மசூதியைப் பற்றிக் கவிதை: எழுத்தாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

ட்விட்டர் நிறுவனத்தின் இந்த அறிக்கைக்கு ஒன்றிய அரசு  கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

மேலும், புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு இறுதி கெடுவிதித்ததோடு, அதை ஏற்க ட்விட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதை ஏற்க ட்விட்டர் நிறுவனம் மறுத்ததைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டபாதுகாப்பு அந்தஸ்து விலகிக் கொள்ளப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

ட்விட்டர் பதிவுகளை நீக்க உத்தரவிட்டது தொடர்பாக ஆர்.டி.ஐ மனு – தகவலைத் தரமறுத்த ஒன்றிய அரசு

இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று முன்தினம் (ஜூன் 16) ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “தகவல் தொழிநுட்ப சட்ட நெறிமுறை எண் 7-ஐ பின்பற்றவில்லை என்றால் விதி எண் 79-ன் கீழ் இந்தியாவில் சமூகவலைதளங்களுக்கு கிடைக்கும் சட்டரீதியிலான பாதுகாப்பை இழக்கும் சூழல் உருவாகும். நாட்டின் தண்டனை சட்டங்கள் மற்றும் பிற சட்டங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் உட்பட நேரிடும்.” என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து, நேற்று (ஜூன் 17), செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீன் சுர்ஜேவாலா, “140 கோடி இந்தியர்களின் குரலை நசுக்க பிரதமர் மோடி விரும்புகிறார். இது பேச்சு சுதந்திரத்தை காப்பதற்கான போராட்டம். இன்றைய நிலையில், நாட்டில் உள்ள பத்திரிகையாளர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக எதையும் எழுத முடியாது. அப்படி எழுதினால், அவர்கள் வேலையை இழக்க நேரிடும். சிலநேரம் உயிரையும் இழக்க நேரிடும்.” என்று தெரிவித்துள்ளார்.

‘கட்டுப்பட மறுப்பவர்களை நசுக்குகும் ஒன்றிய அரசு; நான் கட்டுப்படாததால் என் மாநில அரசையும் நசுக்குகிறது’ – மம்தா பானர்ஜி

“ஆகவே, இது போன்ற சூழ்நிலையில், யூடியூப், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது. அதில், அப்படி எழுதுவதற்கான நிலைக்கு மக்களை தள்ளுவது மோடி ஜி அவர்களே.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ட்விட்டர் சொந்தமாக எதையும் எழுதவில்லை. இந்த அரசிற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராகவும் எழுதுவது நம் நாட்டு மக்கள்தான். இளைஞர்கள், தலித்துகள், விவசாயிகள், ஏழைகள் என அனைத்து தரப்பு இந்திய மக்களும் ஒன்றிய அரசி்ற்கு எதிராக எழுதுகிறார்கள். மோடிஜியை விமர்சிக்கிறார்கள்.” என்று ரன்தீன் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ஒன்றிய அரசுக்கு பிரச்சினைகள் வருகிறது என்றும் அதனால்தான், ஒவ்வொரு சமூக வலைதளத்தையும் இழுத்து மூட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்