காலணி முதல் உணவு விநியோகம் வரை பலவற்றுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) உயர்த்தியதற்காக மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, பணவீக்கத்தை கட்டுப்படுத்த வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நேற்று(ஜனவரி 1), டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, “இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் நாளில், மோடி அரசு நம் அனைவருக்கும் பணவீக்கத்தின் வடிவத்தில் ஒரு புத்தாண்டு பரிசை வழங்கி இருக்கிறது. இதற்கு நாங்கள் ‘நன்றி மோடி ஜி’ என்று கூறுகிறோம்” என்று ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
“வரி அதிகரிப்பால் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி காலணி, வாடகை கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களை வாடகைக்கு எடுப்பது, ஆன்லைன் விநியோக செயலிகளைப் பயன்படுத்தி உணவுகளை ஆர்டர் செய்வது, படங்கள் வரைய குழந்தைகளுக்கு தேவையான கருவிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுப்பது ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளன. 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தேயிலை, பருப்பு, சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு, உப்பு போன்றவற்றின் விலைகள் கூட உயர்ந்துள்ளன” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.
12 நகரங்களில் ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதை ‘மோடி வரி’ என்று குறிப்பிட்டுள்ள ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, “நினைவில் கொள்ளுங்கள், மோடி இருந்தால் விலைவாசி உயர்வு இருக்கும். மோடி அரசு என்பது விலைவாசி உயர்வு. மோடியும் பணவீக்கமும் நாட்டுக்கு கேடு. வரும் தேர்தலில் பாஜகவை தோற்கடியுங்கள். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ஒன்றிய அரசு வரிகளை அதிகரித்து விடுகிறது. பின்னர் ‘வரியில்லா பட்ஜெட்’ என்ற பெயரில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது” என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.