Aran Sei

‘ராஜ்பவன் சலோ’ – விவசாயிகளுக்கு ஆதரவாக பெங்களுரில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவாசயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுக்கு ஆதரவாக  போராட்டங்களும், பேரணிகளும் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று, பெங்களூரில் கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் `ராஜ் பவன் சலோ’ என்ற, ஆளுநர் இல்லத்தை நோக்கிய பேரணி மற்றும் போராட்டத்தினால், தற்போது அந்த நகரமே ஸ்தம்பித்துள்ளது.

`ராஜ் பவன் சலோ’ என்ற பெயரில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தை, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே. சிவகுமார் வழிநடத்துகிறார்.

இப்போராட்டத்துக்கான அழைப்பாக, டி.கே.சிவகுமார் வெளியிட்ட காணொலியில் “எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர், சங்கோலி ரயானா சிலைக்கு அருகில் வந்துவிடுங்கள். போராட்டத்துக்குப் பின், அங்கிருந்து பேரணி தொடங்கும்” என கூறியிருந்தார்.

அவரின் அழைப்பை ஏற்று அப்பகுதியில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்களால், நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், விவசாய சட்டங்களோடு சேர்த்து, அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு எதிராகவும் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

டெல்லி விவசாயிகள் போராட்டம் – மக்கள் அதிகாரம் குழுவினர் தமிழில் பாடி ஆதரவு

இந்த போராட்டத்தில் டிகே சிவகுமாருடன், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதில், ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க, பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியிலுள்ள சுதந்திர பூங்காவை அடுத்துள்ள மயுரியா என்ற இடத்தில் இருந்து, ஆளுநர் மாளிகைக்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு பேரணியாக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும், விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்களும் புறப்பட தயார் நிலையில் இருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம் குறித்த வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை

பல்லாயிரக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க கூடியதை தொடர்ந்து, அவர்கள் அடுத்தகட்டமாக ராஜ்பவன் நோக்கி செல்வதை தடுப்பதற்காக 500 க்கும் மேற்பட்ட கர்நாடக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தை இன்னும் வலுசேர்க்க எண்ணி, பிற பகுதிகளிலிருந்து பெங்களூர் நோக்கி பலரும் வரத்தொடங்கினர். அவர்களை தடுக்க, நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி தடுத்து நிறுத்தப்பட்ட அனைவரும், தாங்கள் இருக்குமிடத்திலிருந்தே போராடுமாறு டி.கே.சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் “நீங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலைகளை, சாலைகளை முற்றுகையிட்டு, விவசாயிகளுக்கான உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், “பாஜக அரசு, விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றே நினைக்கிறதே தவிர, பிரச்னையை சரிசெய்ய நினைக்கவில்லை. அதற்கான சான்றுதான், இன்று எங்களை தடுப்பது” என்று கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்