Aran Sei

‘உச்ச நீதிமன்ற குழுவில் மோடி ஆதரவாளர்கள்; எவ்வாறு விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்?’ – காங்கிரஸ் கேள்வி

விவசாயிகள் சட்டங்கள் குறித்த சிக்கலைத் தீர்க்க உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் மனுதாரர்களில் ஒருவர் மட்டுமே இடம் பெற்றிருக்கும் போது, எவ்வாறு இந்தக் குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மூன்று விவசாய சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தும், விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க தனி குழுவை அமைத்தும், நேற்று (ஜனவரி 12) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாய சட்டங்களுக்கு இடைக்கால தடை – பிரச்சனையை தீர்க்க தனி குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில், விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாத்தி, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் புபிந்தர் சிங் மான், தெற்காசிய சர்வதேச உணவு கொள்கை அமைப்பின் இயக்குனர் பிரமோத் குமார் ஜோஷி, ஷேத்கரி ஷன்கத்தன் அமைப்பைச் சேர்ந்த அனில் கான்வாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக, நேற்று (ஜனவரி 12) காங்கிரஸ்  கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

‘உச்சநீதிமன்றம் ஏமாற்றி விட்டது’ – போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவிப்பு

அப்போது, “உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் உள்ள உறுப்பினர்களின் நம்பகத்தன்மை குறித்து அரசின் வழக்கறிஞர்கள் யாரேனும் நீதிமன்றத்தில் அறிக்கை  வெளியிட முடியுமா? உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை யார் அளித்தது எனத் தெரியவில்லை. அவர்களின் பின்புலம் பற்றியும் நிலைப்பாடு பற்றியும் ஏன் ஆய்வு செய்யப்படவில்லை. அனைத்து உறுப்பினர்களும் விவசாய சட்டங்களுக்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவானவர்கள். பின், எவ்வாறு இந்த குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் ‘தீவிரவாதிகள்’ என மத்திய அரசு குற்றச்சாட்டு – பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவு

மேலும், “அக்குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் மனுதாரராக இருக்கிறார். எவ்வாறு மனுதாரர் ஒருவரை உச்ச நீதிமன்றம் குழுவில் நியமிக்க முடியும்? 4 உறுப்பினர்களுமே விவசாய சட்டங்களுக்கு ஆதரவானர்கள். இந்தக் குழு அமைக்கப்பட்டது குறித்து சுயஆய்வு செய்ய வேண்டும். இந்தக் குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது.” என்றும் விமர்சித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் அமைத்த குழு குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்களிடம் இருந்து எப்படி நீதி கிடைக்கும். விவசாய விரோத சட்டங்களும், தொழிலாளர் விரோத சட்டங்களும் நீக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.

” உச்சநீதிமன்றத்துக்கு நன்றி, ஆனால் கமிட்டி வேண்டாம், சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” – விவசாய சங்கங்கள்

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், “விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்திய கவலை நியாயமானது. இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண குழுவை அமைப்பது நல்ல நோக்கத்துடன் உள்ளது. ஆனாலும், குழுவில் உள்ளவர்களால் இந்த நோக்கத்தில் குழப்பம் இருப்பதாக தோன்ற வைக்கிறது. இவை முரண்பாடான சமிக்ஞைகளையே நமக்கு அனுப்புகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இக்குழுவினர் அனைவருமே மத்திய பாஜக அரசின் விவசாய சட்டங்களைப் பகிரங்கமாக ஆதரித்து நாளேடுகளில் கட்டுரை எழுதியவர்கள். இக்குழுவைச் சேர்ந்த அசோக் குலாட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 28 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிலும், டாக்டர் பி.கே.ஜோஷி கடந்த டிசம்பர் 15 அன்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேட்டிலும், அனில் கான்வாட் கடந்த டிசம்பர் 21 அன்று தி இந்து நாளேட்டிலும் எழுதிய கட்டுரைகளே இதற்கு சான்றாகும்.”  என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்