Aran Sei

ஒன்றிய அரசின் அரசியலமைப்பு தின விழா: காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள், ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ள அரசியலமைப்பு தின விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

இன்று(நவம்பர் 26), இவ்விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் இருந்து அரசியல் சாசன தின கொண்டாட்டங்களை நேரலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நடத்த இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த் சர்மா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர், இந்நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதற்காக மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அணுகியுள்ளனர்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக அரசியலமைப்பு தினத்தை ஒன்றிய அரசு கொண்டாடும். அதன், ஒரு பகுதியாக, நாடாளுமன்றம் மற்றும் விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் உரையாற்றுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

1949 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டதன் நினைவாக, நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினத்தை நாடு கொண்டாடுகிறது.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்