Aran Sei

அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை இயக்குநர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் அவசர சட்டம் – காங்கிரஸ் எதிர்ப்பு

மலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இயக்குனர்களின் பதவிக் காலத்தை இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள்வரை நீட்டிக்கும் ஒன்றிய அரசின் அவசரச்சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அமலாக்கத்துறை இயக்குனரகம் மற்றும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஆகியவற்றின் இயக்குனர்கள்  மற்றும் ஒன்றிய அரசின் பாதுகாப்பு, உள்துறை மற்றும் வெளியுறவு செயலாளர்கள் ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டிக்க வழிவகை செய்யும், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (திருத்தம்) அவரச்சட்டம், 2021, நவம்பர் 14 ஆம் தேதியிட்ட டெல்லி சிறப்பு காவல் உருவாக்க (திருத்தம்) அவரச்சட்டம், 2021 மற்றும் ஒன்றிய அரசின் பணியாளர் அமைச்சகத்தின் நவம்பர் 15ஆம் தேதியிட்ட அரசாணை  ஆகியவற்றுக்கு எதிராக ரன்தீப் சுர்ஜேவாலா மனு தாக்கல் செய்துள்ளார்.

‘நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் பழக்கத்தைச் சீர்குலைக்கவே அவசரச்சட்ட வழிமுறை’- காங்கிரஸ் குற்றச்சாட்டு

அம்மனுவில், “இதுபோன்ற நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக அவ்வப்போது பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை இந்தச் சட்டங்கள் மீறுகின்றன. இந்த அவசரச் சட்டங்கள் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தெளிவாக காட்டுகிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றுக்கு சட்டங்களின் வழங்கப்பட்ட நிலையான விதிமுறைகளுக்கு முடிவு கட்டும் வகையில்,  அதன் இயக்குனர்களின் பதிவிக்காலத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க இந்திய அரசிற்கு அதிகாரம் வழங்குகிறது. மேலும், பதிவி காலத்தை நீட்டிக்க வேண்டுமாயினும் நீக்கலாம்” என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நவம்பர் 14 ஆம் தேதி, அமலாக்கத்துறை இயக்குநர் மற்றும் சிபிஐ இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அவசரச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. தற்போது, ​​ஒன்றிய விஜிலென்ஸ் ஆணையம் (சிவிசி) சட்டம், 2003-ன்படி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்கள் இரண்டு ஆண்டுகால பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசரச்சட்டம் ஜனநாயக அமைப்புகளை அழிக்கும்’- ராஷ்டிரிய ஜனதா தளம்

முன்னாதாக, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டிவிட்டர் பக்கத்தில், “தனது விஸ்வாசிகளான சிபிஐ, அமலாக்கத்துறைகளை வைத்துக்கொண்டு, சட்டவிரோதமாக அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மோடி அரசு கவிழ்க்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையும், சிபிஐ அமைப்பும் ரெய்டு நடத்துவதை ஒரு நடைமுறை விதியாக வைத்துள்ளன. இந்த இரு விஸ்வாசிகளுக்கும் அதிகாரம் அளித்து, ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் அளித்துள்ளது ஒன்றிய அரசு. இந்தச் செயல் எதிர்பவர்களின் குரலை அடக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

“நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் பழக்கத்தைச் சீர்குலைக்கவே மீண்டும் மீண்டும் அவசரச் சட்ட வழிமுறையை ஒன்றிய அரசு கையில் எடுக்கிறது. நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில் அதற்குள் இந்த அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டிய அவசரம் என்ன?” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  மனீஷ் திவாரியும் கேள்வி எழுப்பியிருந்தார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்