மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில், நாளை மறுநாள் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு விழாவிற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவுள்ளதாக காங்கிரஸ் மாநிலக் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இன்று (ஜனவரி 12) சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது,“தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாள் அன்று ’ராகுல் காந்தியின் தமிழ் வணக்கம்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். அந்த வகையில், நாளை மறுநாள் ஜனவரி 14 ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டைப் பார்க்க தமிழகத்திற்கு ராகுல் காந்தி வருகின்றார்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், “அப்போது ராகுலின் புகழ் கொடிகட்டிப் பறக்க போகிறது. மதுரை அவனியாபுரத்திற்கு விமானம் மூலம் சரியாக ஜனவரி 14 ஆம் தேதி 11 மணிக்கு வருகிறார். தமிழகத்தில் 4 மணி நேரம் செலவிடுவார். ஜல்லிக்கட்டில் தமிழர்களின் வீரம், பெருமையைப் பார்த்து ரசித்துக் கண்டுகளிக்கவே ராகுல் காந்தி வருகிறார். இதில் தேர்தல் பிரசாரம் தொடர்பான விஷயங்கள் இருக்காது. அவர் விருப்பபட்டால் விவசாயிகளை சந்திப்பார். அவர் தமிழக மக்களை அதிகமாக நேசிக்கிறார். ராகுல் காந்தி வருகையை அடுத்து, காங்கிரஸின் மூத்த தலைவர்களும் வருவார்கள். அடுத்தப்படியாக ராகுல் காந்தி தமிழகம் வரும் போது கூட்டணி கட்சிகளைச் சந்திப்பார்.” என்று கே.எஸ்.அழகிரி தகவல் அளித்துள்ளார்.
‘இந்தியாவிடம் ஃபேஸ்புக் பொய் சொல்கிறதா’ – ராகுல் காந்தி கேள்வி
மேலும், சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் ராகுல் காந்தி மிகப்பெரிய சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் குறிப்பாக, தெற்கு, மேற்கு, டெல்டா மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நாளை மறுநாள் (ஜனவரி 14) சென்னை மதுரவாயலில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள ’நம்ம ஊர் பொங்கல்’ விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும், பின்னர் கலைவாணர் அரங்கில் நடக்கும் துக்ளக் விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.