Aran Sei

” இந்திரா காந்தியின் அவசர நிலை தவறான முடிவு ” – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து

றைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்து 1975 முதல் 1977 வரை அமலில் இருந்த அவசரநிலையானது தவறான முடிவு என்றும் அந்த காலகட்டத்தில் நடந்தவை தவறானவை என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரபல பொருளாதார நிபுணர் கௌசிக் பாசுவுடனான உரையாடலின்போது தெரிவித்துள்ளார்.

மேலும், அவசரநிலை காலகட்டத்தில் அரசியலமைப்பு உரிமைகளும் தனிமனித உரிமைகளும் தடை செய்யப்பட்டு, ​​ஊடகங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டன என்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (மார்ச் 2) இரவில், இணைய வழியில் நடைபெற்ற இந்த உரையாடலில் பேசிய ராகுல் காந்தி, “அது (அவசரநிலை) ஒரு தவறான முடிவு என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக அது ஒரு தவறான முடிவுதான். என் பாட்டி (இந்திரா காந்தி) அவ்வளவுதான் சொன்னார். ஆனால் காங்கிரஸ் எத்தருணத்திலும் இந்தியாவின் ஆதார கட்டமைப்பைக் கைப்பற்ற முயற்சி செய்யவில்லை. வெளிப்படையாக சொல்வதானால், அப்படி செய்வதற்கான திறன் காங்கிரஸிடம் இல்லை. எங்கள் (காங்கிரஸின்) கட்டமைப்பு எங்களை அப்படிச் செய்ய அனுமதிக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

‘எமர்ஜென்சியை நோக்கி செல்கிறோம்’ – திஷா ரவிக்கு ஆதரவாக விவசாயிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள்

“1975க்கும் 1977க்கும் இடையில் நடந்தவற்றுக்கும் இன்று நடந்து கொண்டிருப்பதற்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது. இன்று பாஜகவின் சித்தாந்த ஆலோசகர்களான ஆர்எஸ்எஸ்காரர்கள் அரசின் எல்லா நிறுவன கட்டமைப்பிலும் நிரப்பப்பட்டு விட்டார்கள். ஆகவே, நாங்கள் தேர்தலில் பாஜகவை தோற்கடித்தாலும், இந்த நிறுவன கட்டமைப்பில் உள்ள அவர்களை அகற்றுவது நடக்கப் போவதில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

“நவீன ஜனநாயகம் செயல்படுவதற்கான அடிப்படை அரசு நிறுவன கட்டமைப்புகளில் நிலவும் சமநிலையும் அந்நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான தன்மையும்தான். ஆனால், அந்த சுதந்திரம் இந்தியாவில் தாக்கப்படுகிறது. இதை ஆர்எஸ்எஸ் என்ற ஒரு பெரிய நிறுவனம் முறையாக செய்கிறது. ஜனநாயகம் அழிந்து வருவதாக நான் சொல்லமாட்டேன். மாறாக, ஜனநாயகத்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்கிறார்கள்.” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராமர் கோவில் நன்கொடை : ‘ஹிட்லரின் நாஜிக்கள் செய்ததை ஆர்.எஸ்.எஸும் செய்தால் நாடு என்னாகும்?’ – எச்.டி.குமாரசாமி

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல் நாத் உடனான உரையாடலை நினைவு கூரும் ராகுல் காந்தி, “கமல் நாத்தின் அரசு அகற்றப்படுவதற்கு முன்பாக அவர் என்னிடம் பேசினார். அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகார மையங்கள், ஆர்எஸ்எஸ்-க்கு விசுவாசமாக இருப்பதால், அவரது உத்தரவுகளைப் பின்பற்ற மறுப்பதாக கூறினார். இந்த சம்பவமே, இப்போது நடப்பது அடிப்படையில் வேறுபட்டது என்பதற்கு ஒரு சான்று”  என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “கட்சிக்குள் நடத்தப்படும் ஜனநாயக முறையிலான தேர்தல் முற்றிலும் சிக்கலானது என்று கூறும் முதல் நபர் நான்தான். ஆனால், இந்தக் கேள்வி வேறு எந்த அரசியல் கட்சிகளிடமும் கேட்கப்படவில்லை என்பது எனக்கு சுவாரஸ்யமானது. பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகளில் ஏன் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று யாரும் கேள்வி கேட்பதில்லை.” அவர் சொன்னார்.

‘ராமரின் பெயரில் ஊழல்’ – தெருத் தெருவாக கொள்ளையடிப்பதாக எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு டிசம்பரில், 94 வயதான ஒரு பெண்மணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவசரநிலை அறிவிப்பானது முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவிக்க முடியுமா  என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்