Aran Sei

‘2014 இல்தான் சுதந்திரம் கிடைத்தது 1947 இல் கிடைத்தது பிச்சை’ – கங்கனாவின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு; பத்ம விருதை திரும்பப்பெற வேண்டுகோள்

ங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை உடனடியாக குடியரசுத் தலைவர் மாளிகை திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆனந்த சர்மா வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பத்ம விருது பெற்ற திரைக் கலைஞர் கங்கனா ரணாவத், “பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சிதான் காங்கிரஸ் ஆட்சி. உண்மையில் இந்தியாவுக்கு 2014 ஆம் ஆண்டுதான் சுதந்திரம் கிடைத்தது. 1947 ஆம் ஆண்டு நமக்கு கிடைத்தது பிச்சைதான்” என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக, ஆனந்த சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில், “அதிர்ச்சிகரமாகவும் சினம்கொள்ளும் வகையிலும் உள்ளது. மகாத்மா காந்தி, நேரு மற்றும் சர்தார் படேல் தலைமையிலான துணிச்சல் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் வகையிலும் சர்தார் பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் போன்ற புரட்சியாளர்களின் தியாகங்களை இழிவுபடுத்தும் வகையில் கங்கனா ரணாவத்தின் அறிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை உடனடியாக குடியரசுத் தலைவர் மாளிகை திரும்பப் பெற வேண்டும் என்றும் இதுபோன்ற நபர்கள் நம் நாட்டையும் நம் மாவீரர்களையும் இழிவுபடுத்தாமல் இருக்க, இத்தகைய விருதுகளை வழங்குவதற்கு முன் அவர்களின் மனநலத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “பிரதமர் மோடி தனது மௌனத்தை கலைத்து, கங்கனா ரணாவத்தின் கருத்துகளை ஆமோதிக்கிறீர்களா என்று நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் அத்தகையவர்கள் மீது அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆனந்த சர்மா கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பண்டிட் தனது ட்விட்டர் பக்கத்தில், “1947 ஆம் ஆண்டு தங்கள் பிரிட்டிஷ் எஜமானர்கள் வெளியேற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டதை ஆர்எஸ்எஸ்ஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் அடிமைத்தனத்திற்கு எல்லையே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அரை நூற்றாண்டு காலம் அவர்கள் (ஆர்எஸ்எஸ்)  மூவர்ணக் கொடியை ஏற்றாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. கங்கனா ரணாவத் அவர்களில் ஒருவர். 2014 ஆம் ஆண்டு, நமது நாடு அடிமைத்தனத்திற்கு திரும்பியது. இது தான் பாஜக அளித்துள்ள சுதந்திரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்