Aran Sei

‘உளவு பார்க்க வெளிநாட்டு நிறுவனத்தின் ஸ்பைவேர் உபயோகிப்பது தேசத்துரோகம் இல்லையா?’ – காங்கிரஸ் கேள்வி

ந்திய நாட்டின் பாதுகாப்புப் படைகள், நீதித்துறை, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சமூக ஆர்வலர்களை உளவு பார்க்க ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் ஸ்பைவேர் உபயோகிப்பது தேசத்துரோகம் இல்லையா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, நேற்று (ஜூலை 19), மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.

அப்போது பேசிய ரன்தீப் சுர்ஜேவாலா, “இந்தச் சட்டவிரோத ஸ்பைவேர் பெகசஸை பொறுப்பேற்க வேண்டிய நபர் ஒன்றிய உள்துறை அமைச்சர்தான். அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். எங்கள் முதல் கோரிக்கை உள்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அமித் ஷாவை பதவிலிருந்து நீக்குவதோடு, இவ்விவகாரத்தில் பிரதமரின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

‘பெகசஸ் ஸ்பைவேர் விவகாரம் அச்சமூட்டும் வகையில் உள்ளது’ – ஐநா மனித உரிமை ஆணையர் கண்டனம்

பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் இருவரில் யார் பெகசஸை வாங்க உத்தரவிட்டார், எவ்வளவு பணம் செலவிடப்பட்டது உள்ளிட்ட பல கேள்விகளை காங்கிரஸ் எழுப்பியுள்ளது.

“இந்திய நாட்டின் பாதுகாப்புப் படைகள், நீதித்துறை, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சமூக ஆர்வலர்களை உளவு பார்க்க ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் ஸ்பைவேர் உபயோகிப்பது தேசத்துரோகம் இல்லையா? தேசிய பாதுகாப்பை மீறியது மன்னிக்க முடியாததல்லவா?” என்று  ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “அரசியலமைப்பு நசுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி படுகொலை செய்யப்பட்டுள்ளது. பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மொத்த அரசாங்கமும் பொய்களையே உறுதிமொழியாக பதவியேற்பின் போது எடுத்துக் கொண்டுள்ளது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

பெகசஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியல் – ராகுல் காந்தி பெயரும் இடம்பெற்றுள்ளது

அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “மோடிஜி டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், நாம் பார்த்துக்கொண்டிருப்பதோ ‘கண்காணிக்கப்படும் இந்தியா’” என்று குறிப்பிட்டுள்ளார்.

source; thehindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்