Aran Sei

‘விவசாயிகளோடுஅகங்காரத்துடன் செயல்படுகிறது ஒன்றிய அரசு’- காங்கிரஸ் செயற்குழு கண்டனம்

கங்காரத்துடன் செயல்படும் ஒன்றிய அரசு விவசாயிகளுடன் பேச்சு நடத்த மறுத்து பார்வையாளராக மட்டுமே நிற்கிறது என்றும் அதே நேரத்தில் பாஜக மற்றும் காவல்துறையின் முரட்டு குழுக்கள் அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டன என்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று(அக்டோபர் 16), காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. அக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஏ.ஏகே.அந்தோனி, மல்லிகார்ஜூன கார்கே,கே.கே.வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

அப்போது, நாட்டின் அரசியல் சூழல், பணவீக்கம், விவசாயிகள் பிரச்சினை மற்றும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தில், “ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதல் மோடி அரசின் வேதனையான மற்றும் வெட்கமில்லாததை வெளிக்காட்டுகிறது. இந்தியா இனிமேலும் ஜனநாயக நாடு என்று கருதப்படாது, இந்தியா தேர்தல் ஜனநாயகத்துக்கு பெயர் பெற்று விளங்கி வந்தது. நாடாளுமன்றம் அவமதிக்கப்பட்டு புறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவம் ஒன்றிய அரசு தொடர்ந்து அகங்காரத்துடன் செயல்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை இதுவரை பிரதமர் மோடி பதவிநீக்கம் செய்யவில்லை. நமக்கு உணவை வழங்கும் விவசாயிகள், நிலமில்லாத விவசாய தொழிலாளர்கள் மீது கடந்த ஏழு ஆண்டுகளாக கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது” என்று அத்தீர்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

“உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவ்வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் 43 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளது. மோசமான விளைவுகளைச் சந்திப்பீர்கள் என்று வெளிப்படையாகவே விவசாயிகளை மிஸ்ரா அச்சுறுத்தினார். இருப்பினும் அவர் பதவீநீக்கம் செய்யப்படவில்லை. விவசாய சட்டங்களுக்கு எதிராக விவாசயிகள் கடந்த ஓர் ஆண்டாகப் போராடி வருகிறார்கள். அகங்காரத்துடன் செயல்படும்அரசு விவசாயிகளுடன் பேச்சு நடத்த மறுத்து பார்வையாளராக மட்டுமே நிற்கிறது. அதே நேரத்தில் பாஜக மற்றும் காவல்துறையின் முரட்டு குழுக்கள் அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டன.” என்று கூறப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கொலை ஆகியவை குறித்து இதுவரை பிரதமர் எந்தவிதமான இரங்கலும், கண்டனமும் தெரிவிக்க மறுத்துவிட்டார் என்றும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சரையும் பதவி நீக்கம் செய்ய மறுத்து தேசத்தின் மனசாட்சியையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்  என்றும் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்